ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்


ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 8 Jan 2020 11:09 AM IST (Updated: 8 Jan 2020 11:09 AM IST)
t-max-icont-min-icon

ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார். அவர் ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். காசிம் சுலைமானி கொல்லப்பட்ட பிறகு ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாகும் சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஈராக்கின் அல் அசாத் பகுதியில் இருந்த அமெரிக்க படைதளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. 

10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.  தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. ஈரானின் தாக்குதலில் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இதனால் அமெரிக்கா எந்த நேரமும் தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால் போர்ப்பதற்றம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. 

ஈரான், ஈராக், ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவின்  வான் வெளி குறித்து இந்திய விமான நிறுவனங்கள் விழிப்புடன் இருக்கவும், வான்வெளியில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் சிவில் ஏவியேஷன் இயக்குனரக இயக்குனர்  கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈராக்கில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் மேலும் அறிவிக்கும் வரை ஈராக்கிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், ஈராக்கிற்குள் பயணிப்பதைத் தவிர்க்கவும்  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து இயங்கும். ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்கு தூதரக உதவிகள் உடனடியாக செய்யப்படும். ஈராக்கிற்கு பயணம் மேற்கொள்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story