நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் : மேற்கு வங்காளம், ஒடிசாவில் ரெயில் சேவை பாதிப்பு
நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் மேற்கு வங்காளம், ஒடிசாவில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
12 அம்ச பொது கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 மத்திய தொழிற்சங்கங்கள் இன்று (புதன்கிழமை) நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீடு, தனியார் மயமாக்கல் உள்ளிட்ட மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது.
வேலைநிறுத்தத்தில் 25 கோடிக்கு மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக 10 தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தால் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் ரெயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில், தல்ச்சர், புவனேஸ்வர், பிரம்மபூர், பத்ராக் மற்றும் கேண்டுஜர்கர் ஆகிய இடங்களில் வேலைநிறுத்தத்தை அடுத்து கிழக்கு கடற்கரை ரயில்வேயில் (ஈ.சி.ஓ.ஆர்) ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது.
இதுபோல் மேற்குவங்காளத்திலும் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தில் இடது மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் தொழிற்சங்கத்தினர் ரெயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் சாலைமறியலும் நடைபெற்றது.
கொல்கத்தாவில் பந்த் ஆதரவாளர்கள் பெல்காரியா நிலையத்தில் முற்றுகையிட்டனர், இதனால் சீல்டா (தெற்கு) பிரிவில் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. அசன்சோல் மற்றும் மால்டா பிரிவுகளில் ரெயில் சேவைகள் இயல்புபோல் நடைபெறுகிறது. ஆனால் ரெயில்களின் இயக்கம் செங்கெயிலிலும் பாலசூரிலும் முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளது. கூச் பெஹாரின் தூர்கஞ்ச் காவல் நிலையம் அருகே பஸ் ஒன்று கல்வீசி தாக்கப்பட்டது.
கேரளா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றது. தமிழகத்திலும் தொழிற்சங்கங்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story