குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி மத்திய அரசு மனு; நாளை விசாரணை


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி மத்திய அரசு மனு; நாளை விசாரணை
x
தினத்தந்தி 8 Jan 2020 11:26 PM GMT (Updated: 8 Jan 2020 11:26 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரும் மத்திய அரசின் மனுவை நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று தெரிவித்தது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மத்திய அரசு தரப்பில் நேற்று ஆஜராகி, ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு ஐகோர்ட்டுகளில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக கர்நாடக ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

இந்த வழக்குகள் மீது ஐகோர்ட்டுகள் ஒவ்வொன்றும் தங்கள் கருத்தில் மாறுபட்ட முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஏறத்தாழ 60 வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை கடந்த டிசம்பர் மாதம் 18-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு ,அந்த மனுக்கள் மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

எனவே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் உள்ள பல்வேறு ஐகோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று முறையிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மத்திய அரசின் இந்த மனுவை நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

Next Story