பாமாயில் இறக்குமதி : மலேசியா மீது மத்திய அரசு வர்த்தக கட்டுப்பாடு
காஷ்மீர், குடியுரிமை திருத்த சட்ட விவகாரங்களில் எதிரான நிலைப்பாட்டை எடுத்துவரும் மலேசியா மீது வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
புதுடெல்லி,
மலேசிய பிரதமர் மகாதீர் முகமது அண்மையில் "ஒரு மதச்சார்பற்ற நாடு என்று கூறும் இந்தியா இப்போது முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன். "நாங்கள் அதை இங்கே செய்தால், என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும். குழப்பம் இருக்கும், உறுதியற்ற தன்மை இருக்கும், எல்லோரும் பாதிக்கப்படுவார்கள்" என்று அவர் கூறினார் என கடந்த டிசம்பர் மாதம் 20 ந்தேதி பேசி இருந்தார்.
மேலும் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளதாக ஐ.நா பொதுச்சபையில் பேசினார்.
இதற்கு இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பாமாயில் எண்ணெய் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தக உறவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பாமோலின் இறக்குமதிக்கு மத்திய அரசு நேற்று கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது இந்தியா இப்போது கச்சா பாமாயிலை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். இது சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பாமொலின் இந்தியாவின் முக்கிய சப்ளையரான மலேசியாவைத் பாதிக்கும். ஆனால் கச்சா பாமாயிலின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான இந்தோனேசியாவிற்கு இது உதவக்கூடும். தயாரிப்பு மற்றும் விலை ஒரே மாதிரியாக இருப்பதால் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு கூடுதல் செலவு இருக்காது.
மலேசியாவிலிருந்து பாமாயில் வாங்க வேண்டாம் என்று அரசாங்கம் இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஒரு தொழில்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
நாம் பாமாயில்களில் 30 சதவீதத்தை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம், 70 சதவீதம் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம்.
உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய்களை இறக்குமதி செய்யும் இந்தியா, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 15 மில்லியன் டன்களை வாங்குகிறது. இதில், பாமாயில் 9 மில்லியன் டன்களும், மீதமுள்ள 6 மில்லியன் டன் சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெயும் அடங்கும்.
இந்தியாவிற்கு பாமாயில் சப்ளை செய்யும் இரு நாடுகள் இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகியவை ஆகும்.
மலேசியா ஒரு வருடத்தில் 19 மில்லியன் டன் பாமாயிலை உற்பத்தி செய்கிறது, இந்தோனேசியா 43 மில்லியன் டன்களை உற்பத்தி செய்கிறது என்று வர்த்தக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசிய பொருளாதாரத்திற்கு பாமாயில் முக்கியமானது, ஏனெனில் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவீதமும் மொத்த ஏற்றுமதியில் 4.5 சதவீதமும் ஆகும்.
Related Tags :
Next Story