"வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும்" -உச்சநீதிமன்றம்
வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. புதிய திருத்தப்பட்ட சட்டத்தின் படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி, இந்தியாவில் அகதிகளாக உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியும். 2014-ம் ஆண்டுக்கு முன் இந்தியாவுக்குள் குடியேறிய முஸ்லீம் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது எனக்கூறி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தரபிரதேசம், பீகார், அசாம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக பட்டியலிட்டு உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், நாட்டில் பல்வேறு இடங்களில் நிகழும் வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story