சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தில் திரிணாமூல் காங். பங்கேற்காது ; மம்தா பானர்ஜி


சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தில் திரிணாமூல் காங். பங்கேற்காது ; மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 9 Jan 2020 8:19 AM GMT (Updated: 9 Jan 2020 8:19 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஆலோசிக்க நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் திரிணாமூல் காங். பங்கேற்காது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக  ஆலோசனை நடத்த  எதிர்க்கட்சிகளுக்கு, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஜனவரி 13 ஆம் தேதி டெல்லியில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக மேற்கு  வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ்  பங்கேற்காது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது தொடர்பாக கூறியதாவது ; -

‘குடியுரிமைச் சட்டம், குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதனை மேற்குவங்க மாநிலத்தில் அமல்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதேசமயம் போராட்டத்தில் வன்முறையை தூண்டிவிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

மேற்குவங்க மாநிலத்தில் நேற்று நடந்த முழுஅடைப்பு போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறையை ஏற்க முடியாது. இடதுசாரிகளும், காங்கிரசும், குடியுரிமைச் சட்டத்தை வைத்து மேற்குவங்கத்தில் மிகமோசமான அரசியல் செய்கிறார்கள். இதனை அனுமதிக்க முடியாது. வரும் 13-ம் தேதி குடியுரிமைச் சட்டம் தொடர்பாக விவாதிக்க டெல்லியில் சோனியா காந்தி கூட்டியுள்ள கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது. நாங்கள் தனித்தே போராடுவோம்’’ என்றார்.

Next Story