ஜே.என்.யூ. வன்முறை விவகாரம்: போலீசாரின் குற்றச்சாட்டிற்கு அய்ஷி கோஷ் மறுப்பு


ஜே.என்.யூ. வன்முறை விவகாரம்: போலீசாரின் குற்றச்சாட்டிற்கு அய்ஷி கோஷ் மறுப்பு
x
தினத்தந்தி 10 Jan 2020 7:43 PM IST (Updated: 10 Jan 2020 7:43 PM IST)
t-max-icont-min-icon

ஜே.என்.யூ. வன்முறை தொடர்பான டெல்லி காவல்துறையின் குற்றச்சாட்டிற்கு அய்ஷி கோஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுதங்களுடன்  புகுந்த மர்ம நபர்கள், பல்கலைக்கழக மாணவர்களை சரமாரியாக தாக்கினர்.  இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர் சங்க தலைவி  உள்பட 33 பேர் காயம் அடைந்தனர். இதை கண்டித்து நாடு முழுவதும்  மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் வன்முறை நடந்து 4 நாட்கள் ஆகியுள்ள போதிலும்,  இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும், டெல்லி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் தொடர்புடையவர்கள் பிடிபடுவார்கள் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

இது தொடர்பாக ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடந்த  வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை டெல்லி காவல்துறை வெளியிட்டது.

இது குறித்து துணை ஆணையர் டாக்டர் ஜாய் டிர்கி கூறும்போது,

கலவரம் தொடர்பாக பரவிய வீடியோ மற்றும் விசாரணை அடிப்படையில் அவர்களை கண்டறிந்துள்ளோம். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, கலவரத்தில் உள்ள பங்கு குறித்து விசாரணை நடத்துவோம். மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ், வஷ்கர் விஜய் விகாஸ் படேல் சுசுன் குமார், பங்கஜ் மிஸ்ரா, வஷ்கர் விஜய், சுசிதா தலுக்ராஜ், பிரியா ரஞ்சன், டோலன் சவந்த், யோகேந்திரா பரத்வாஜ் மற்றும் இடதுசாரி மாணவர் சங்கத்தினருக்கு கலவரத்தில் பங்கு உள்ளது.  கலவரத்தில் தொடர்புடைய இன்னும் சிலரை விரைவில் அறிவிப்போம். 

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், இது குறித்து அய்ஷி கோஷ்  மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 

போலீசார் அவர்களின் பணியை தொடரலாம். யாரையும் நான் தாக்கவில்லை, நான் தாக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. துணைவேந்தர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. அவரால், பல்கலையை சுதந்திரமாக இயக்க முடியவில்லை. பல்கலையை சுமூகமாக இயக்கக்கூடிய நபரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும். நாட்டின் சட்டம் ஒழுங்கு மீதும், விசாரணை நேர்மையாக நடக்கும் என நம்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story