உத்தர பிரதேசம் ; பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்


உத்தர பிரதேசம் ; பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 11 Jan 2020 2:35 AM GMT (Updated: 11 Jan 2020 2:35 AM GMT)

உத்தர பிரதேசத்தில் பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தரப்பிரதேசத்தின் பருக்காபாத்தில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நோக்கி 45 பயணிகளுடன் சொகுசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கன்னூஜ் மாவட்டத்தில் உள்ள சிலோய் பகுதியில் பேருந்து எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. 

இந்த விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கன்னூஜ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ உத்தர பிரதேசத்தின் கன்னூஜ் பகுதியில் நடந்த சாலை விபத்து பற்றிய செய்தி அறிந்ததும் நான் மிகவும் துயருற்றேன். இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

Next Story