இந்திய எல்லையை கண்காணிக்கும் பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்கள்; அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்


இந்திய எல்லையை கண்காணிக்கும் பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்கள்; அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 11 Jan 2020 3:34 PM GMT (Updated: 11 Jan 2020 3:34 PM GMT)

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த பின்பு தினமும் 10 முதல் 15 ஆளில்லா குட்டி விமானங்களை இந்திய எல்லை பகுதிக்கு அனுப்பி பாகிஸ்தான் கண்காணித்து வருவதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியா - பாகிஸ்தான் இடையே குஜராத் தொடங்கி, ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், லடாக் என பல நீண்ட எல்லை உள்ளது. இதனிடையில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து  வழங்கும் 370 வது பிரிவை ரத்து செய்த பின்னர் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 முதல் 15 டிரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் பறப்பதை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் கவனித்துள்ளனர். 

இருப்பினும் கடந்த ஒரு மாதமாக இவற்றின் வரத்து ஓரளவுக்கு குறைந்து காணப்படுகிறது எனவும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஈடுபடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் எல்லைப்பகுதியில் அதிக பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும் ராணுவ வீரர்கள் தயாராக இருப்பதாகவும் ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். 

அவர்கள் மேலும் கூறுகையில் "டிரோன் என்னும் குட்டி விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு குறிப்பிட்ட நவீன ஆயுதங்களும் பயிற்சியும் இப்போது நமது வீரர்களுக்கு அளிக்கப்படவில்லை. ஆகவே, தற்போதுள்ள அறிவுறுத்துதல்கள் எல்லாம் அவற்றை கண்டால் இலக்காகக் கொண்டு சுட்டு வீழ்த்த முயற்சி செய்யுங்கள் என வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டனர். 

இந்நிலையில், கடந்த ஆண்டு (2019) அக்டோபர் மாதம் பாகிஸ்தானின் இரண்டு ஆளில்லா உயர் ரக குட்டி விமானங்கள் (டிரோன்கள்) பஞ்சாப் எல்லையில் பறந்து சென்றதை கண்ட எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியினை தீவிரப்படுத்தினர். இதில் பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூர் அருகே ஹூசைனிவாலா எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் இரண்டு ஆளில்லா விமானங்கள் பறந்து வந்ததை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டனர்.

நான்கு முறை வந்த இந்த உளவு விமானங்கள் இந்திய எல்லைக்குள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தாண்டிவந்துவிட்டு, பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக திரும்பிச் சென்றன. அப்போது, இந்திய எல்லைக்குள் இரண்டு ஆளில்லா உயர் ரக குட்டி விமானங்கள் பறந்த தகவலை கேட்டு உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியினை தீவிரப்படுத்தினர். பூஜ்ய எல்லைக்கோடு என்று அழைக்கப்படும் எல்லையை ஒட்டி நெருக்கமாக வசிக்கும் மக்களிடம் ஏதேனும் சந்தேகத்திற்கான விஷயங்களை கண்டால், உடனடியாக போலீஸ் அல்லது எல்லைப்பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவிக்குமாறு எல்லைப்பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

தரையில் நின்று கொண்டு ஒரு ரிமோட் மூலமாக இயக்கப்படும் இவ்வித குட்டி விமானங்கள் மூன்று வகையான வடிவமைப்பில் உள்ளன. ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டிருக்கும் இவ்வித குட்டி விமானங்கள் சத்தமில்லாமல் வந்து தங்களின் பணிகளை செய்கின்றன. இவை சிறிய அளவில் இருப்பதாலும் வேகமாக நகரும் திறன் கொண்டதாலும் இவற்றை இடைமறித்து அழிப்பது என்பது ஒரு கடினமான செயலாகும்.

இதனைத்தொடர்ந்து இந்த டிரோன்களால் அதிகரித்து வரும் அபாயத்தை அறிந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சகமும் மற்றும் பிற மத்திய அரசு நிறுவனங்களும் அச்சுறுத்தலைக் குறைக்க டிரோன்களை இடைமறித்து அழிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளன.

Next Story