தேசிய செய்திகள்

கொச்சியில் மேலும் இரு அடுக்குமாடி குடியிருப்புகள் இடித்து தரைமட்டம் + "||" + Destruction of two buildings built in violation of regulations in Kochi

கொச்சியில் மேலும் இரு அடுக்குமாடி குடியிருப்புகள் இடித்து தரைமட்டம்

கொச்சியில் மேலும் இரு அடுக்குமாடி குடியிருப்புகள் இடித்து தரைமட்டம்
கொச்சியில் நேற்று மேலும் இரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
கொச்சி,

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மரடு பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை இடிக்குமாறு கடந்த ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.


இதைத்தொடர்ந்து, 4 குடியிருப்பு கட்டிடங்களையும் இடித்து அகற்றுவதற்கான பணிகளை கேரள அரசு கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி முதல் மேற்கொண்டது. அந்த கட்டிடங்களுக்கு மின்சாரம், குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டதால், அவற்றில் வசித்து வந்தவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறினார்கள். அதன்பிறகு அந்த குடியிருப்புகளில் உள்ள ஜன்னல், கதவுகள் அகற்றப்பட்டு, 4 அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வெடிமருந்து நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, 19 மாடிகளை கொண்ட எச்2ஓ ஹோலி பெய்த் கட்டிடமும், ஆல்பா செரீன் என்ற குடியிருப்பு கட்டிடமும் நேற்றுமுன்தினம் அடுத்தடுத்து இடித்து தள்ளப்பட்டன.

நேற்று ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் ஆகிய மேலும் 2 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களும் இடிக்கப்பட்டன. அருகருகே உள்ள இந்த இரு கட்டிடங்களும் தலா 55 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும்.

முதலில் ஜெயின் கோரல் கோவ் கட்டிடம் இடிக்கப்பட்டது. வெடிமருந்து மூலம் காலை 11.03 மணிக்கு அந்த கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. வெடிமருந்து வெடித்ததும் அந்த கட்டிடம் புழுதி பறக்க சீட்டுக்கட்டு சரிவது போல் தரையில் சரிந்தது.

இதைத்தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு கோல்டன் காயலோரம் அடுக்குமாடி குடியிருப்பும் இதேபோல் இடித்து தள்ளப்பட்டது.

இரு கட்டிடங்களும் இடிந்து விழுவதை பார்க்க அந்த பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர்.

இரு கட்டிடங்களையும் இடிக்கும் முன் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 200 மீட்டர் சுற்றளவில் குடியிருந்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அந்த பகுதியில் வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களையும் இடிக்கும் பணி திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் எஸ்.சுகாஸ், கொச்சி நகர போலீஸ் கமிஷனர் விஜய் சுகாரே ஆகியோர் தெரிவித்தனர்.

அருகில் உள்ள கட்டிடங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.