சுப்ரீம் கோர்ட்டில் சபரிமலை வழக்கில் இன்று முதல் விசாரணை


சுப்ரீம் கோர்ட்டில் சபரிமலை வழக்கில் இன்று முதல் விசாரணை
x
தினத்தந்தி 12 Jan 2020 10:30 PM GMT (Updated: 12 Jan 2020 10:01 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டில், சபரிமலை மேல்முறையீட்டு வழக்கில் இன்று முதல் விசாரணை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பது இல்லை என்ற நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு, அந்த கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. சபரிமலை கோவிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 60-க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இந்த மேல்முறையீட்டு வழக்கை 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது.

என்றாலும் சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று 2018-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு நீதிபதிகள் இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், எம்.எம்.சந்தோஷ் கவுடர், எஸ்.ஏ.நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகிய 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்று இருந்த நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி இருந்தார். இதனால் அவர் இந்த 9 நீதிபதிகள் அமர்வில் இடம் பெறவில்லை.

இதேபோல், தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்த 5 நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்று இருந்த நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருந்தனர். இதனால் அவர்களும் இந்த 9 நீதிபதிகள் அமர்வில் இடம் பெறவில்லை.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வில், சபரிமலை வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று (திங்கட்கிழமை) முதல் விசாரணை நடைபெறும்.


Next Story