டெல்லி திகார் சிறையில் ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போட ஒத்திகை


டெல்லி திகார் சிறையில் ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போட ஒத்திகை
x
தினத்தந்தி 13 Jan 2020 3:14 AM GMT (Updated: 13 Jan 2020 10:07 PM GMT)

டெல்லி திகார் சிறையில், ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது. இதற்காக குற்றவாளிகளின் எடையுள்ள பொம்மைகளை பயன்படுத்தினர்.

புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி ‘நிர்பயா’, கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி நள்ளிரவு, ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், அதே மாதம் 29-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், ராம்சிங் என்பவன் திகார் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டான். மற்றொருவன் சிறுவன் என்பதால், 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டான்.

முகேஷ் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடக்கோரி, டெல்லி கோர்ட்டில் ‘நிர்பயா’வின் பெற்றோரும், டெல்லி மாநில அரசும் வழக்கு தொடர்ந்தனர்.

அதை ஏற்று, வருகிற 22-ந் தேதி காலை 7 மணிக்கு 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த தண்டனையை நிறைவேற்ற 2 பேரை அனுப்பி வைக்குமாறு உத்தரபிரதேச சிறைத்துறை நிர்வாகத்துக்கு திகார் சிறை அதிகாரிகள் கடிதம் எழுதினர். அதன்படி, மீரட்டை சேர்ந்த பவன் ஜல்லட் என்பவரை அனுப்பி வைக்க உத்தரபிரதேச சிறைத்துறை ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில், 4 குற்றவாளிகளையும் தூக்கில் போட திகார் சிறையில் ஒத்திகை நடைபெற்றது. 4 பேரின் எடையை அதிகாரிகள் பதிவு செய்து, அதே எடையில் பொம்மைகளை தயார் செய்திருந்தனர். கற்கள் மற்றும் கட்டிட கழிவுகள் நிரப்பப்பட்ட சாக்குகளை கொண்டு இந்த பொம்மைகள் தயாரிக்கப்பட்டன.

சிறை அதிகாரிகள் முன்னிலையில், அந்த பொம்மைகள் தூக்கில் போடப்பட்டு ஒத்திகை நடந்தது.

22-ந் தேதி காலை 7 மணிக்கு 3-ம் எண் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. 4 பேரும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்படுகிறார்கள். அவர்கள் நல்ல மனநிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, அவர்களிடம் சிறை அதிகாரிகள் தினமும் உரையாடி வருகிறார்கள்.

இதற்கிடையே, கடைசி முயற்சியாக, சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக குற்றவாளிகளின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். தூக்கிலிடும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோருவோம் என்றும் கூறினர்.


Next Story