மோடியும், அமித்ஷாவும் மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்ட முயற்சிக்கின்றனர் - சோனியாகாந்தி தாக்கு


மோடியும், அமித்ஷாவும் மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்ட முயற்சிக்கின்றனர் - சோனியாகாந்தி தாக்கு
x
தினத்தந்தி 13 Jan 2020 2:25 PM GMT (Updated: 13 Jan 2020 2:25 PM GMT)

பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப மோடியும், அமித்ஷாவும் மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்ட முயற்சிக்கின்றனர் என்று சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி  காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சோனியாகாந்தி பேசியதாவது:-

பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்ட முயற்சிக்கின்றனர். 

சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி-யில் பிரதமர் மோடியும், உள்துறை  மந்திரி அமித்ஷாவும் மக்களை தவறாக வழிநடத்தியுள்ளனர். மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு செயலற்றதாக இருக்கிறது. 

நாடு முழுவதும் மக்கள் ஆதரவுடன் இளைஞர்கள் போராட்டம் நடைபெற்று உள்ளது.  இந்த போராட்டங்களுக்கு தற்போதைய காரணம் குடியுரிமை திருத்தச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் தான் என்றாலும், நீண்ட காலமாக தேக்கி வைத்த கோபத்தின் வெளிப்பாடும் போராட்டங்களுக்கு காரணம். ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சி என்பது தான் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினை. இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு மக்களவை தேர்தலில் போட்டியிட்ட மூத்த தலைவர்களை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டார்.

Next Story