ஓட்டு வங்கி அரசியலால் நதிகள் இணைப்புக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க மறுப்பு: மத்திய மந்திரி குற்றச்சாட்டு


ஓட்டு வங்கி அரசியலால் நதிகள் இணைப்புக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க மறுப்பு: மத்திய மந்திரி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Jan 2020 11:00 PM GMT (Updated: 13 Jan 2020 8:39 PM GMT)

ஓட்டு வங்கி அரசியலால், நதிகள் இணைப்புக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க மறுக்கின்றன என்று மத்திய மந்திரி குற்றம் சாட்டினார்.

அவுரங்காபாத்,

மத்திய ஜல சக்தி துறை இணை மந்திரி ரத்தன்சிங் கடாரியா, மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்துக்கு வந்தார். விவசாயத்துக்கு தண்ணீரை திறம்பட பயன்படுத்துவது குறித்த பயிலரங்கத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது, மராத்வாடா போன்ற வறண்ட பகுதிகளில் குறைந்த தண்ணீர் தேவை கொண்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பின்னர், ரத்தன்சிங் கடாரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்கான பணிகளை மத்திய அரசு செய்துள்ளது.

இணைக்கக்கூடிய வகையில் பல்வேறு நதிகள் உள்ளன. அவற்றில் 4 நதிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாராக உள்ளது. ஆனால், மாநில அரசுகள் ஒத்துழைக்க மறுக்கின்றன.

எத்தனையோ நதிகளில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக ஓடுகிறது. இருந்தாலும், தண்ணீரை பிற மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள பெரும்பாலான மாநில அரசுகள் தயாராக இல்லை. ஏனென்றால், தண்ணீரை பகிர்ந்து கொண்டால் ஓட்டுகளை இழக்க வேண்டி இருக்கும் என்று பயப்படுகின்றன.

இந்த ஓட்டு வங்கி அரசியலால் ஒத்துழைக்க மறுக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story