காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு: ‘தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்த கரங்கள்’ என பேட்டி


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு: ‘தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்த கரங்கள்’ என பேட்டி
x
தினத்தந்தி 14 Jan 2020 7:51 AM GMT (Updated: 14 Jan 2020 8:34 PM GMT)

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். பின்னர், ‘தி.மு.க.வும், காங்கிரசும் எப்போதும் இணைந்த கரங்கள்’ என்று அழகிரி தெரிவித்தார்.

புதுடெல்லி,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது அவர் உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து சோனியா காந்தியிடம் விளக்கியதாக தெரிகிறது.

இந்த சந்திப்புக்கு பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாநில நிர்வாகிகளை புதிதாக நியமிப்பது தொடர்பாக கட்சியின் தலைவி சோனியா காந்தியுடன் பேசினோம். இந்த சந்திப்பின் மிக முக்கியமான நோக்கம் அதுதான்.

தொடர்ந்து எங்கள் கட்சியின் கூட்டணி தொடர்பாகவும் பேசினோம். கூட்டணி பற்றி என்னுடைய கருத்தை தலைவரிடம் கூறினேன். காங்கிரசும், தி.மு.க.வும் இணைந்த கரங்கள். தமிழ்நாடு காங்கிரசும், தி.மு.க.வும், நானும், ஸ்டாலினும் தனிப்பட்ட முறையில் மிகவும் நெருங்கியவர்கள்.

எனவே இணைந்த கரங்கள் பிரிவதற்கான வாய்ப்பு எப்போதும் கிடையாது. எனவே நாங்கள் பிரிவதற்கு வாய்ப்பு இல்லை என்று அவரிடம் கூறினேன். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் அறிக்கை காரணமாகத்தான் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்கவில்லை என்று டி.ஆர்.பாலு கூறியிருக்கிறாரே? என்று அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

டி.ஆர்.பாலு என்னைவிட அரசியலிலும், வயதிலும் மூத்தவர். எனவே அவருடைய கருத்துக்கு பதில் கூற நான் விரும்பவில்லை. குடும்பம் என்று இருந்தால் ஊடலும், கூடலும் இருக்கத்தான் செய்யும். ஆனால் எங்கள் குடும்பத்தில் கோபமும், வருத்தமும் கிடையாது. தி.மு.க. ஏன் கலந்துகொள்ளவில்லை என்பது குறித்து அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.

ஊராட்சி தேர்தல் எங்கள் இருவருக்கு இடையில் உள்ள உறவை என்றும் பாதிக்காது. கூட்டணி வெற்றிக்கு அனைவரும் காரணம். எங்கள் கூட்டணி நல்ல பாதையை நோக்கி செல்லும். சோனியா காந்தி என்னுடைய அறிக்கை பற்றி எதுவும் கேட்கவில்லை. எங்கள் கூட்டணி என்றும் தொடரும், சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story