தேசிய செய்திகள்

நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு: ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு; இன்று விசாரணை + "||" + Jallikattu led by judge: Appeal to the Supreme Court against the Icord order; Trial today

நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு: ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு; இன்று விசாரணை

நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு: ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு; இன்று விசாரணை
நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்த கூறிய, ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
புதுடெல்லி,

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான குழுவை நியமித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான குழுவில் அனைத்து சமுதாயத்தினரையும் சேர்க்க வேண்டும். கலெக்டர் அமைத்துள்ள கமிட்டியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அருந்ததியினர் சமுதாயத்தை சேர்ந்தவரை கமிட்டி உறுப்பினராக சேர்க்க வேண்டும். ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் மதுரை ஐகோர்ட்டில் ஏராளமானோர் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை சுமுகமாக நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து நடத்த உத்தரவிட்டது. மேலும் அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்து உள்ளது.

மதுரை ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே.கண்ணன் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ‘அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பல ஆண்டுகளாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் நடத்தி வருகிறது. இது எங்களது பாரம்பரிய உரிமை ஆகும். ஆனால் ராமசாமி என்பவரது மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்துள்ளது. இது எங்களது பாரம்பரிய உரிமைக்கு எதிரானது. எனவே மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு மனுதாரர் ஏ.கே.கண்ணன் தரப்பில் அவருடைய வக்கீல் சிவபாலமுருகன் ஆஜராகி இந்த மேல்முறையீட்டு மனுவை உடனடியாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி இந்த வழக்கை இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் இன்று காலை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.