மத்திய தொகுப்பில் இருந்து முழுமையாக மின்சாரம் வழங்க வேண்டும்: மத்திய மந்திரியிடம், அமைச்சர் பி.தங்கமணி கோரிக்கை


மத்திய தொகுப்பில் இருந்து முழுமையாக மின்சாரம் வழங்க வேண்டும்: மத்திய மந்திரியிடம், அமைச்சர் பி.தங்கமணி கோரிக்கை
x
தினத்தந்தி 14 Jan 2020 11:00 PM GMT (Updated: 14 Jan 2020 8:51 PM GMT)

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து வழங்க வேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம், அமைச்சர் பி.தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில், மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்திதுறை மந்திரி (தனிபொறுப்பு) ஆர்.கே.சிங்கை, தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி சந்தித்தார். அப்போது, மின்சார வாரிய தலைவர் விக்ரம் கபூர் உடனிருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது:-

தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்து வழங்கும் மின்சாரத்தின் சராசரி மின் தொடரமைப்பு மற்றும் வணிக இழப்புகள் தற்போது 14 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இவற்றை மேலும் குறைப்பதற்கு பகிர்மான மின்மாற்றிகளில் மீட்டர்கள் பொருத்தி முழுமையாக மின்சார இழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றை முழுமையாக மாற்றுவதற்கு தமிழகத்தில் 4 லட்சம் மீட்டர்கள் தேவைப்படுகிறது. இதற்கு ரூ.1,200 கோடி நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் வழங்கப்படும் மின்சாரத்திற்கான தொகை 98 சதவீதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

மின்சார பயன்பாட்டை துல்லியமாக கண்காணிக்க வசதியாக ‘ஸ்மார்ட் மீட்டர்கள்’ பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் 1.4 லட்சம் ‘ஸ்மார்ட் மீட்டர்கள்’ பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து படிப்படியாக அனைத்து மீட்டர்களும் ‘ஸ்மார்ட் மீட்டர்களாக’ மாற்றப்படும்.

தமிழகத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. வாரியத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 6,000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது குறைவான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் பற்றாக்குறையை சமாளிக்க தனியார் மற்றும் வெளிசந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் வங்கிகள் மூலம் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. வருகிற கோடை காலத்தை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து வழங்க வேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story