8 வழிச்சாலை திட்ட வழக்கு: மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு


8 வழிச்சாலை திட்ட வழக்கு: மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு
x
தினத்தந்தி 14 Jan 2020 10:30 PM GMT (Updated: 14 Jan 2020 9:23 PM GMT)

8 வழிச்சாலை திட்ட வழக்கு தொடர்பாக, மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவினை பிறப்பித்தது.

புதுடெல்லி,

சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசை சேர்ந்த வக்கீல் சூரியபிரகாசம், விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்தை மக்களிடம் திருப்பிக்கொடுக்கவும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை கிண்டியில் இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருக்கும் நிலையில் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தரப்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா, கிருஷ்ண முராரி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும், மத்திய அரசின் மனு மீது கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 28–ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story