குடியுரிமை திருத்த சட்டம் : கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது நெறிமுறை மீறல், மரியாதை மீறல் -கவர்னர் கோபம்


குடியுரிமை திருத்த சட்டம் : கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது நெறிமுறை மீறல், மரியாதை மீறல் -கவர்னர் கோபம்
x
தினத்தந்தி 16 Jan 2020 7:46 AM GMT (Updated: 16 Jan 2020 7:46 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது நெறிமுறை மீறல் மற்றும் மரியாதை மீறல் என்று கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் கூறினார்.

திருவனந்தபுரம், 

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாநில சட்டசபையில்  சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தொடரில் முதல்-மந்திரி பினராயி விஜயன் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவை மதச்சார்பு நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிப்பதாக அந்த தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இதன் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்று இருக்கிறது.

ஆனால் கேரள கவர்னர் குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராகவும், அதை ரத்து செய்யவும் கேரள அரசு கொண்டு வந்த தீர்மானத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லை. ஏனென்றால், குடியுரிமை என்பது மத்திய அரசின் பட்டியலில் இருக்கிறது. இதில் மாநில அரசு செயல்படுவதற்கு எந்தவிதமான முகாந்திரமும், பங்கும் இல்லை என கூறினார்.

இதைத் தொடர்ந்து கேரள அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து  செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளது.

இந்த நிலையில், கவர்னர் ஆரிஃப் முகமது கான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
கவர்னரின்  ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது  நெறிமுறை மீறல் மற்றும் மரியாதை மீறல் ஆகும். அவ்வாறு  செல்ல முடியுமா என்பதை நான் ஆராய்வேன்.

அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு  செல்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, நான் அரசியலமைப்புத் தலைவராக இருப்பதால் அவர்கள் முதலில் எனக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பத்திரிகைகள்  மூலம் அதைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். தெளிவாக கூறுகிறேன், நான்  ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என கூறினார்.

Next Story