ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் - மத்திய அரசு


ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு:  இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் - மத்திய அரசு
x
தினத்தந்தி 16 Jan 2020 3:09 PM GMT (Updated: 16 Jan 2020 3:09 PM GMT)

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

புல்வாமா தாக்குதல், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றுக்கு பிறகு இந்தியா–பாகிஸ்தான் உறவு மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:–

அமெரிக்க அதிபரின் இந்திய வருகை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கடந்த சில மாதங்களாக நிலவுகின்றன. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்த போது, இந்தியா வரும்படி அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக இரு நாடுகளும் பேசி வருகின்றன. உறுதியான தகவல் கிடைத்ததும் அனைவருக்கும் தெரிவிக்கப்படும். 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசு தலைவர்கள் கூட்டத்தை, இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடத்த உள்ளோம். இது, பிரதமர் அளவிலான கூட்டமாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 8 உறுப்பினர் நாடுகள், 4 பார்வையாளர் நாடுகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் ‘ஷாங்காய் அமைப்பில் பாகிஸ்தானும் இருப்பதால், அதன் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படுமா?’’ என்று கேட்டதற்கு ‘‘எல்லோரையும் அழைப்போம். ஆனால் அதன்பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போது சொல்வது கஷ்டம்’’ என்று ரவீஷ் குமார் கூறினார்.

Next Story