பயங்கரவாதிகளுக்கு உதவிய காஷ்மீர் துணை போலீஸ் சூப்பிரண்டு பதக்கம் பறிப்பு


பயங்கரவாதிகளுக்கு உதவிய காஷ்மீர் துணை போலீஸ் சூப்பிரண்டு பதக்கம் பறிப்பு
x
தினத்தந்தி 16 Jan 2020 10:30 PM GMT (Updated: 16 Jan 2020 7:18 PM GMT)

பயங்கரவாதிகளுக்கு உதவிய காஷ்மீர் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு வழங்கப்பட்ட உயரிய போலீஸ் அதிகாரிக்கான பதக்கம் பறிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

ஸ்ரீநகர், 

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் கடந்த 11–ந்தேதி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக சென்ற கார் ஒன்றை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து, அதில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் ஒருவர் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்திர சிங் என்பதும், அவர் ஸ்ரீநகர் விமானநிலையத்தின் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மற்ற 2 பேரும் ஹிஸ்புல் முஜாகிதீன், லஸ்கர்–இ–தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நவீத், ஆஷிப் அகமது என்பதும் தெரியவந்தது.

அவர்கள் வந்த காரில் இருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். குறிப்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்திர சிங்கிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 2011–ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டதாக கைதாகி பின்னர் தூக்கிலிடப்பட்ட அப்சல்குரு, போலீஸ் அதிகாரி தேவேந்திர சிங் தனக்கு உதவி செய்ததாக அப்போது கூறியிருந்தார். மேலும் பயங்கரவாதிகளுக்கு டெல்லியில் அடைக்கலம் கொடுக்க தன்னை நாடியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் தேவேந்திர சிங் அப்போது தண்டனையில் இருந்து தப்பிவிட்டார். ஆனால், தற்போது பயங்கரவாதிகளுடன் காரில் சென்றபோது வசமாக சிக்கிக்கொண்டார். இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேவேந்திர சிங்கின் பணியை பாராட்டி கடந்த 2018–ம் ஆண்டு சிறந்த போலீஸ் அதிகாரிக்கான விருது வழங்கப்பட்டது. தற்போது அவர் கைது செய்யப்பட்டு உள்ளதால் இந்த விருது மற்றும் பதக்கத்தை பறிமுதல் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான உத்தரவை மாநில உள்துறை முதன்மை செயலாளர் ஷாலீன் காப்ரா வெளியிட்டுள்ளார்.

தேவேந்திர சிங்கின் செய்கையும், விசுவாசமின்மையும் அனைத்து போலீசாருக்கும் இழிவை தேடித்தந்துள்ளது. எனவே அவருக்கு வழங்கப்பட்ட உயரிய போலீஸ் அதிகாரிக்கான பதக்கத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story