குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையிலும் தீர்மானம்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையிலும் தீர்மானம்
x
தினத்தந்தி 17 Jan 2020 9:43 AM GMT (Updated: 17 Jan 2020 9:43 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சண்டிகார்,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும்  போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள மாநில சட்டசபையில்  சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தீர்மானத்தை கொண்டு வந்தார். குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவை மதச்சார்பு நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிப்பதாக அந்த தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இதன் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்று இருக்கிறது.

இந்த நிலையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில சட்டசபையிலும் சிறப்பு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தில் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட குடியுரிமை  திருத்தச்சட்டம், நாடு முழுவதும் பரவலான ஆர்ப்பாட்டங்களுடன் நாடு தழுவிய வேதனையையும் சமூக அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த  சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பஞ்சாப் மாநிலத்திலும் நடைபெற்று வருகிறது. ஆனால் அவை அமைதியாக நடைபெற்றது. நமது சமூகம் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியது.

குடியுரிமை  திருத்தச்சட்டம் சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான ஜனநாயகத்தை எதிர்க்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பின்னால் உள்ள சித்தாந்தம் இயல்பாகவே பாரபட்சமானது மற்றும் இது ஒரு மனிதாபிமான நடவடிக்கைக்கு தொலைவில் உள்ளது.

இந்த உண்மைகளின் பின்னணியில், நமது அரசியலமைப்பின் அடிப்படை அம்சமான இந்தியாவின் மதச்சார்பற்ற அடையாளத்தை குடியுரிமை திருத்த சட்டம் மீறுகிறது என்பது தெளிவாகிறது.

எனவே குடியுரிமை வழங்குவதில் மதத்தின் அடிப்படையில் எந்தவொரு பாகுபாட்டையும் தவிர்க்கவும், இந்தியாவில் உள்ள அனைத்து மதக் குழுக்களுக்கும் சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்யவும் குடியுரிமை திருத்த சட்டத்தை  ரத்து செய்யுமாறு இந்திய அரசிடம் வலியுறுத்த சபை தீர்மானிக்கிறது என அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story