சுரங்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வெளியிடாத தீர்ப்பை வரவேற்ற மத்திய மந்திரி: சர்ச்சை ஏற்பட்டதால் வாபஸ் பெற்றார்


சுரங்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வெளியிடாத தீர்ப்பை வரவேற்ற மத்திய மந்திரி: சர்ச்சை ஏற்பட்டதால் வாபஸ் பெற்றார்
x
தினத்தந்தி 17 Jan 2020 8:43 PM GMT (Updated: 17 Jan 2020 8:43 PM GMT)

சுரங்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வெளியிடாத தீர்ப்பை வரவேற்பதாக கூறிய மத்திய மந்திரி, சர்ச்சை ஏற்பட்டதால் அந்த கருத்தை வாபஸ் பெற்றார்.

பனாஜி,

கோவாவில் உள்ள 88 இரும்பு சுரங்கங்களுக்கான குத்தகை ஒப்பந்தத்தை கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததை தொடர்ந்து, அங்கு சுரங்கப்பணிகள் முடங்கி உள்ளன. இந்த உத்தரவுக்கு எதிராக மாநில அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் கோவாவில் உள்ள சுரங்கம் ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முன்னரே வெட்டி எடுக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டு உள்ள இரும்பு தாதுவை எடுத்து செல்வதற்கும், சுரங்கத்தை வணிக ரீதியாக இயக்குவதற்கும் அனுமதி கேட்டு சுரங்க நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பை நிறுத்தி வைத்தது.

ஆனால் இந்த வழக்கில் தீர்ப்பு வந்ததாகவும், அது சுரங்க நிறுவனத்துக்கு ஆதரவாக இருந்ததாகவும் கூறி கோவாவை சேர்ந்த மத்திய இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சுரங்க நிறுவனத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி கொடுத்ததுடன், இரும்பு தாது எடுத்து செல்வதற்கும் அனுமதி வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக கூறியிருந்தார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வழங்காத நிலையில் அதை வரவேற்பதாக கூறிய மந்திரியின் கருத்து மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து தனது கருத்தை அவர் வாபஸ் பெற்றார்.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதாகவும், அது கோவாவுக்கு ஆதரவாக இருந்ததாகவும் தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானதால் அறிக்கை வெளியிட்டதாக பின்னர் அவர் விளக்கம் அளித்தார்.


Next Story