கடின உழைப்பாளியான மோடிக்கு எதிராக ராகுல் காந்திக்கு இந்திய அரசியலில் வாய்ப்பு இல்லை -ராமசந்திர குஹா


கடின உழைப்பாளியான மோடிக்கு எதிராக ராகுல் காந்திக்கு  இந்திய அரசியலில் வாய்ப்பு இல்லை -ராமசந்திர குஹா
x
தினத்தந்தி 18 Jan 2020 7:38 AM GMT (Updated: 18 Jan 2020 7:38 AM GMT)

கடின உழைப்பால் இந்த நிலைக்கு உயர்ந்த மோடிக்கு எதிராக இந்திய அரசியலில் ராகுல் காந்திக்கு வாய்ப்பு இல்லை என வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குஹா தெரிவித்துள்ளார்.

கோழிக்கோடு: 

காங்கிரஸ் குடும்பத்தின் 5-வது தலைமுறையான ராகுல் காந்திக்கு கடின உழைப்பால் இந்த நிலைக்கு உயர்ந்த மோடிக்கு எதிராக இந்திய அரசியலில் வாய்ப்பு இல்லை என வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குஹா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இலக்கிய திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்று வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குஹா கலந்து கொண்டார். அதில் அவர் தேசபக்தியும் போர் குணமும் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திர இந்தியாவின் போது மிகப் பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது குடும்ப கட்சியாக மாறிவிட்டது. இதுவே இந்தியாவில்  இந்துத்துவாவும் போராடும் குணமும் தலைத் தூக்க காரணம்.

தனிப்பட்ட முறையில் ராகுலுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அவர் மரியாதைக்குரிய நபர், ஒழுக்கமான, நன்னடத்தை கொண்டவர். ஆனால் இளைஞர்களை கொண்ட இந்தியாவுக்கு 5-வது தலைமுறையை சேர்ந்த தலைமை தேவையில்லை.

மலையாள மக்களாகிய நீங்கள் ஒரு தவறு இழைத்துவிட்டீர்கள் என்றால் அது ராகுலை வயநாட்டில் தேர்வு செய்ததுதான். குடும்ப ஆதிக்கத்தால் உத்தரப்பிரதேசத்தில் தோல்வி அடைந்த ஒருவருக்கு நீங்கள் வாய்ப்பு வழங்கியுள்ளீர்கள். வரும் 2024-லும் நீங்கள் இதே தவறை செய்தால், அது நரேந்திர மோடிக்குத்தான் நன்மை.

நரேந்திர மோடியின் சிறந்த நன்மை என்னவென்றால் அவர் ராகுல் காந்தியாக இல்லாததே ஆகும். கட்சியில் பல பொறுப்புகளை தானாகவே வளர்ந்து வகித்தவர் மோடி. 15 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தை ஆண்டார்.

அவருக்கு நிர்வாக திறமை உண்டு. ஐரோப்பாவுக்கு செல்ல அவர் ஒருபோதும் விடுமுறை எடுக்கவில்லை. அவர் நம்பத்தகாத வகையில் கடின உழைப்பாளி. 

ராகுல் காந்தியும் மேற்கண்ட நல்ல விஷயங்களை கொண்டவர்தான். ஆனால் அவரது குடும்பத்தினரே தலைமுறை தலைமுறையாக பதவியை வகித்து வருகிறார்கள். ராகுல் தானாக முன்னுக்கு வரவில்லை என கூறினார்.

Next Story