சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் முழுஅடைப்பு போராட்டம்


சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் முழுஅடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2020 8:42 AM GMT (Updated: 19 Jan 2020 9:28 PM GMT)

சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சையை தொடர்ந்து நேற்று ஷீரடியில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை.

மும்பை,

மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில் சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ஷீரடிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்தநிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மராட்டிய அரசு, ஷீரடி சாய்பாபா பிறந்ததாக ஒரு தரப்பினரால் நம்பப்படும் பர்பானி மாவட்டம் பாத்ரியை சுற்றுலா தலமாக மேம்படுத்த முடிவு செய்து உள்ளது.

அந்த நகரத்தின் மேம்பாட்டுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு ஷீரடி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பாத்ரி நகரை சாய்பாபாவின் பிறந்த இடமாக கருதி ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றினால், ஷீரடியின் மதிப்பு குறைந்து போய் விடும் என்று உள்ளூர்வாசிகள் அஞ்சுகின்றனர். இதையடுத்து, பாத்ரியை மேம்படுத்தும் முதல்-மந்திரியின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு வியாபாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அழைப்பு விடுத்தனர்.

அதன்படி நேற்று ஷீரடியில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. அங்குள்ள கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஷீரடி சுற்றுவட்டாரத்தில் உள்ள 25 கிராமங்களிலும் முழுஅடைப்பு நடைபெற்றது. ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் ஓடவில்லை.

முன்னதாக ஷீரடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாய்பாபா கோவிலை சுற்றி பிரமாண்ட பேரணியை நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். முழுஅடைப்பின் போது சாய்பாபா கோவிலும் மூடப்பட்டு இருக்கும் என தகவல் வெளியானது. ஆனால் இதை கோவில் நிர்வாகம் மறுத்தது. அதன்படி ஷீரடி சாய்பாபா கோவில் நேற்று வழக்கம் போல் திறந்து இருந்தது.

கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்களின் வசதிக்காக அன்னதான கூடம் மற்றும் லட்டு விற்பனை செய்யும் மையங்கள் திறந்து இருந்தன. விமான நிலையத்தில் இருந்து கோவிலுக்கு வழக்கம் போல் டாக்சிகள் இயங்கின. வெளியூர்களில் இருந்து ஷீரடிக்கு அரசு பஸ்களும் வந்து சென்றன.

தங்கும் விடுதிகளில் ஏற்கனவே அறைகளை முன்பதிவு செய்திருந்தவர்கள் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக முழு அடைப்பு போராட்டத்தால் பக்தர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

முழு அடைப்பு பற்றி சாய்பாபா கோவிலின் முன்னாள் அறங்காவலர் சச்சின் பாட்டீல் கூறுகையில், முழுஅடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
ஷீரடியில் நடந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு சிவசேனாவைச் சேர்ந்த உள்ளூர் எம்.பி. சதாசிவ் லோகண்டே ஆதரவு தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், “நான் முதலில் ஒரு சாய் பக்தன். பின்னர் தான் எம்.பி. இந்த முழு அடைப்பு போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன். சாய்பாபா தனது 16 வயதில் ஷீரடிக்கு வந்தார். அவர் ஒருபோதும் தனது சாதியையோ, மதத்தையோ வெளிப்படுத்தவில்லை, இந்த பிரச்சினை பற்றி நான் முதல்-மந்திரியிடம் பேசுவேன்” என்றார்.

பாரதீய ஜனதாவை, சேர்ந்த ஷீரடி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ண விகே பாட்டீலும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.


Next Story