1,350 எம்.பி.க்கள் அமர வசதி: முக்கோண வடிவத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்; மாதிரி வரைபடம் தயார்


1,350 எம்.பி.க்கள் அமர வசதி: முக்கோண வடிவத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்; மாதிரி வரைபடம் தயார்
x
தினத்தந்தி 19 Jan 2020 11:15 PM GMT (Updated: 19 Jan 2020 10:16 PM GMT)

நாடாளுமன்றத்தில் 1,350 எம்.பி.க்களுக்கு இருக்கை வசதியுடன், முக்கோண வடிவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாதிரி வரைபடம் தயாராகி உள்ளது.

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய இந்தியாவில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக எழுந்து வருகிறது.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

முதலில் நாடாளுமன்றத்துக்கு 2022-ம் ஆண்டுக்குள் புதிய கட்டிடம் கட்டுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த கட்டிடம் மக்களவை, மாநிலங்களவை என இரு சபையின் 900 எம்.பி.க்கள் அமர போதுமானதாகவும், 1,350 எம்.பி.க்களுக்கு இருக்கை வசதி செய்வதற்கு ஏற்றதாகவும் கட்டப்படுகிறது.

இந்த நாடாளுமன்ற கட்டிடத்தை முக்கோண வடிவத்தில் கட்டி முடிப்பதற்கு ஆமதாபாத்தை சேர்ந்த எச்.எஸ்.பி. டிசைன் நிறுவனம் யோசனை தெரிவித்து இருக்கிறது. இந்த நிறுவனம் மாதிரி வரைபடம் ஒன்றையும் தயார் செய்து அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த யோசனை ஏற்கப்பட்டால், முக்கோண வடிவ நாடாளுமன்ற கட்டிடம், தற்போதுள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு அடுத்து அமையும். இந்திரா காந்தி தேசிய கலை மையம், இட மாற்றம் செய்யப்படும். தேசிய ஆவண காப்பகம் மறுவடிவமைப்பு செய்யப்படும்.

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம், தற்போதுள்ள தெற்கு பிளாக் வளாகத்தின் பின்புறம் மாற்றப்படும். இதே போன்று துணை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லம், வடக்கு பிளாக்கின் பின்புறம் அமையும்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அகலமான, சவுகரியமான, பரந்த இருக்கைகளில் எம்.பி.க்கள் அமர வழிவகை செய்யப்படும். நாடாளுமன்ற கூட்டு கூட்டம் நடக்கிறபோது ஒரு இருக்கையில் 3 எம்.பி.க்கள் அமரக்கூடிய அளவுக்கு இட வசதி இருக்கும்.

மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப விகிதாசார அடிப்படையில் 2026-ம் ஆண்டுவாக்கில் 848 எம்.பி.க்கள் இருக்க வேண்டும் என்று அரசியல் வல்லுனர்கள் மிலான் வைஷ்ணவ், ஜாமி ஹிண்ட்சன் ஆகியோர் கணித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தறபோதைய மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 545 என்பதை கிட்டத்தட்ட இரு மடங்கு ஆக்குகிற வகையில் 1,000 ஆக உயர்த்த வேண்டும் என்று குரல் கொடுத்து இருப்பது நினைவுகூரத்தக்கது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நாடாளுமன்ற வளாகம் 13 ஏக்கரில் பிரமாண்டமானதாக அமையும்.

மத்திய அரசு செயலகங்கள் அமைந்துள்ள வடக்கு மற்றும் தெற்கு பிளாக்குகள் அருங்காட்சியகங்களாக மாற்றப்படும்.

மத்திய அரசு செயலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.

அத்துடன் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள ரைசினா ஹில் பகுதியில் இருந்து, விஜய் சவுக், இந்தியா கேட் வழியாக தியான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கம் வரை அமைந்துள்ள ராஜபாதையும் மறுவடிவமைப்பு செய்யப்படும்.


Next Story