தேசிய செய்திகள்

ஜே.பி.நட்டா, பா.ஜனதா தலைவர் ஆகிறார்: இன்று வேட்புமனு தாக்கல் + "||" + JP Natta BJP leader is: Nomination filed today

ஜே.பி.நட்டா, பா.ஜனதா தலைவர் ஆகிறார்: இன்று வேட்புமனு தாக்கல்

ஜே.பி.நட்டா, பா.ஜனதா தலைவர் ஆகிறார்: இன்று வேட்புமனு தாக்கல்
ஜே.பி.நட்டா, பாரதீய ஜனதா தலைவர் ஆகிறார். அவர் சார்பில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது.
புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சி 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது கட்சித்தலைவர் பதவி வகித்தவர் ராஜ்நாத் சிங். அவர் அப்போது பிரதமர் மோடி மந்திரிசபையில் உள்துறை மந்திரி ஆனார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி, அந்த கட்சியில் பின்பற்றப்படுகிறது.


அதன் அடிப்படையில், 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி, பாரதீய ஜனதா கட்சிக்கு அமித் ஷா தலைவர் ஆனார்.

அவரது தலைமையில் கட்சி, நல்லதொரு வளர்ச்சியை பெற்றது. அவரது தலைமையில்தான் 2019 நாடாளுமன்ற தேர்தலை கட்சி சந்தித்தது. அதில், முந்தைய 2014 தேர்தலைவிட கூடுதல் இடங்களை பிடித்து பாரதீய ஜனதா மீண்டும் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அப்போது கட்சிக்கு தேர்தல்களில் தொடர் வெற்றியை தேடித்தந்த நிலையில் அமித் ஷா, பிரதமர் மோடியின் 2-வது அரசில் உள்துறை மந்திரி ஆனார். ஆனாலும், அவர் கட்சிப்பதவியில் தொடர்ந்தார். அவருக்கு உதவியாக செயல்தலைவர் பதவி உருவாக்கப்பட்டது.

அந்தப் பதவியில் முந்தைய மோடி அரசில் சுகாதார துறை மந்திரி பதவி வகித்த ஜே.பி.நட்டா அமர்த்தப்பட்டார். அவர் பாரதீய ஜனதா கட்சியின் செயல் தலைவராக 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி பொறுப்பு ஏற்றார்.

அப்போதே அவர் கட்சியின் எதிர்கால தலைவர் என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டதாக அந்த கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் பிரமாண்ட கூட்டணி அமைத்தபோது, அது பாரதீய ஜனதா கட்சிக்கு பெருத்த சவாலாக அமைந்தது. அப்போது அந்த தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பிரசாரத்துக்கு தலைமை ஏற்று வியூகங்களை அமைத்து தந்தவர் ஜே.பி.நட்டா. மொத்தம் உள்ள 80 இடங்களில் 62 இடங்களை பாரதீய ஜனதா கட்சி வென்றெடுத்தது.

பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா ஆகிய இருவராலும் விரும்பப்படுபவர், எந்த வித சர்ச்சையிலும் சிக்காதவர் என்பது ஜே.பி.நட்டாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சிக்கு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் அமைப்பு தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன் சிங் வெளியிட்டார். அதன்படி வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் 2.30 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெறலாம்.

போட்டி இருந்தால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

ஜே.பி.நட்டா தரப்பில் இன்று வேட்பு மனு தாக்கல் ஆகிறது. அவரது சார்பில் மாநில கட்சி தலைவர்களும், கட்சியின் மூத்த தலைவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

இதற்காக அவர்கள் டெல்லி விரைந்துள்ளனர்.

வேறு யாரும் போட்டியில் இல்லை என்றும், இதன் காரணமாக ஜே.பி.நட்டா இன்று போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்றும், அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜே.பி.நட்டா 1960-ம் ஆண்டு, டிசம்பர் 2-ந் தேதி பிறந்தவர். பீகார் மாநிலம், பாட்னாவில் புனித சேவியர் பள்ளியில் கல்வி பயின்றவர். பாட்னா கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். சிம்லாவில் உள்ள இமாசலபிரதேச பல்கலைக்கழகத்தில் படித்து சட்டத்தில் பட்டம் பெற்றார்.

இமாசல பிரதேச மாநில சட்டசபை உறுப்பினராக 1993-ல் முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. ஆனார். மோடியின் முதல் மந்திரிசபையில் சுகாதார துறை மந்திரியாக உயர்ந்தார். அதன்பின்னர் மோடி, அமித் ஷா ஆகியோரின் நம்பிக்கைக்குரியவராக மாறி, இப்போது 59 வயதில் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வருகிறார்.

இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 7 மாதங்களுக்கு பின்னர் காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறப்பு
7 மாதங்களுக்கு பின்னர் காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
2. கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குவதையொட்டி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குவதையொட்டி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சபையில் எப்படி பேசுவது என்பது குறித்து புதிய மந்திரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
3. மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்க உள்ளன.
4. மாவட்ட லீக் கபடி போட்டி: சென்னையில் இன்று நடக்கிறது
சென்னையில் மாவட்ட லீக் கபடி போட்டி இன்று நடக்க உள்ளது.
5. நிர்பயா வழக்கு குற்றவாளிகளை இன்று தூக்கிலிட தடை: டெல்லி கோர்ட்டு பரபரப்பு உத்தரவு
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளையும் இன்று தூக்கில் இடுவதற்கு டெல்லி கோர்ட்டு தடை விதித்து உள்ளது.