நிர்பயா கொலை குற்றவாளியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


நிர்பயா கொலை குற்றவாளியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 20 Jan 2020 10:07 AM GMT (Updated: 20 Jan 2020 8:18 PM GMT)

தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் நிர்பயா கொலை குற்றவாளியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ராம்சிங் என்பவர் டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மற்ற 4 குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங் (வயது 23), பவன் குமார் குப்தா (25), வினய் சர்மா(26) அக்‌ஷய் குமார் சிங்(31) ஆகியோருக்கு விசாரணை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் அதை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. அவர்களுடைய மறுஆய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதன்பிறகு, குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அவரது கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 17-ந் தேதி நிராகரித்தார்.

இதைத்தொடர்ந்து 4 பேரையும், அவர்கள் தற்போது அடைக்கப்பட்டுள்ள டெல்லி திகார் சிறையில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு கடந்த வாரம் புதிய மரண வாரண்டை பிறப்பித்தது. இதனால் அவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை சிறை நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நிலையில் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்கும் இறுதி முயற்சியாக 4 பேரில் ஒருவரான பவன் குமார் குப்தா கடந்த 17-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், குற்றம் நடைபெற்ற போது தான் சிறுவன் என்றும், எனவே தன்னை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இதே காரணத்தை கூறி, தான் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததையும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

பவன் குமார் குப்தாவின் மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பவன் குமார் குப்தா சார்பில் ஆஜரான வக்கீல் ஏ.பி.சிங், குற்றவாளியின் வயதை நிரூபிக்கும் வகையில் அவருடைய மெட்ரிகுலேஷன் வகுப்பு சான்றிதழை தாக்கல் செய்து, குற்றம் நடைபெற்ற போது பவன் குமார் குப்தா சிறுவனாக இருந்ததற்கான சான்று இது என்று கூறினார்.

அதற்கு நீதிபதி அசோக் பூஷண், ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் பவன் குமார் குப்தாவின் மறுஆய்வு மனுவில் இந்த விஷயத்தை குறிப்பிட்டும் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் இங்கு அந்த பிரச்சினையை ஏன் எழுப்ப வேண்டும்? என்று கேட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பவன்குமார் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தும், இது தொடர்பாக நிலுவையில் ஏதேனும் மனுக்கள் இருந்தால் அவற்றையும் முடித்து வைப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தனர்.

பவன் குமார் குப்தாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை நிர்பயாவின் தந்தை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளின் மனுக்கள் ஏற்கனவே விசாரணை கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும், எனவே சுப்ரீம் கோர்ட்டு தனக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, குற்றவாளிகள் எத்தனை முறை மனு தாக்கல் செய்யலாம் என்பது குறித்து காலவரையறை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Next Story