சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை


சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Jan 2020 5:55 AM GMT (Updated: 21 Jan 2020 5:55 AM GMT)

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதுடெல்லி

சீனாவில் வேகமாகப் பரவி வரும் ஆட்கொல்லி வைரசான கொரோனா மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கும் பரவி வருவதால் இது அபாயகரமான தொற்று நோய் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் தாக்குதலால்  4 பேர் இறந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிசிச்சை அளித்த 14 மருத்துவ ஊழியர்களும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள சீன சுகாதாரத்துறை அதிகாரிகள், கொரோனா வேகமான தொற்றுநோய் என தெரிவித்துள்ளனர். 45 வயது இந்திய ஆசிரியை ஒருவரும் சீனாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

தென் கொரியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்திலும் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் சீனப் புத்தாண்டு கொண்டாடப்பட இருக்கும் நிலையில், பொதுமக்கள் பயணத்தின் போது இந்த வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த வைரசுக்கு சிறப்பு சிகிச்சை ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், தொடர்ந்து விலங்குகளில் சோதனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கினால் பன்றிக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். தீவிரக் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். இது மற்றொரு வகை நிமோனியா என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 சீனாவுக்கு அருகில் இருப்பதால் இந்த வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்து விடக் கூடாது என மத்திய சுகாதாரத்துறையும் தமிழக சுகாதாரத்துறையும் கவனத்துடன் இருந்து வருகின்றனர். சீனாவிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் சீனாவின் எந்த பகுதியிலிருந்து வருகிறார்கள், சுவாசக் கோளாறு, சளி போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்று விமான நிலையத்தில் பரிசோதிக்கப்படுகின்றனர். இந்த வகை  வைரஸை கண்டறிய புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் சில நிறுவனங்களும் தயாராக உள்ளன.

Next Story