டெல்லி சட்டசபை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நீ...ண்ட கியூவில் அரவிந்த் கெஜ்ரிவால் ; டோக்கன் நம்பர்: 45


டெல்லி சட்டசபை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நீ...ண்ட கியூவில் அரவிந்த் கெஜ்ரிவால் ; டோக்கன் நம்பர்: 45
x
தினத்தந்தி 21 Jan 2020 11:23 AM GMT (Updated: 21 Jan 2020 1:35 PM GMT)

டெல்லி சட்டசபை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் நீண்ட கியூவில் காத்திருக்கிறார். அவருக்கு டோக்கன் நம்பர்: 45.

புதுடெல்லி

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தலைநகரின் தேர்தல் களத்தில் 90-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் குதித்துள்ளன.

ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மத்தியில் ஆளும்  பா.ஜ.க., நாட்டை  நீண்ட காலமாக ஆட்சி செய்த காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இடையே பிரதானமாக போ​ட்டி நிலவுகிறது. 

பா.ஜ.க.,  காங்கிரஸ்,  பகுஜன் சமாஜ் கட்சி,  தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும் இந்த தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. 

டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி மாநில  கட்சியாகத்தான் உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ராஷ்டிரிய ஜனதா தளமும், பீகார் மாநிலத்தில் முக்கிய கட்சியாக உள்ள லோக் ஜனசக்தியும், தங்களுக்கு ஏற்கனவே தேர்தல் ஆணையம் கூறியுள்ள சின்னத்தை இந்த தேர்தலுக்கு  ஒதுக்கித் தர  கோரிக்கை வைத்துள்ளன.

மும்முனை போ​ட்டி நிலவி வரும் நிலையில், 85 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் வாக்குகளை பிரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் இது மாதிரியான கட்சிகளுக்கு வெறும் நான்கு  சதவீதம் வாக்குகள் தான் கிடைத்தன.

மக்களாட்சியில் மக்கள் தான் மன்னர்கள் என்பது அடிப்படை. அந்த வகையில், யாருக்கு மக்கள் முடிசூட்டப் போகிறார்கள் என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும்.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மனுதாக்கல் செய்ய சென்றார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில் 

"எனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யக் காத்திருக்கிறேன். எனது டோக்கன் எண் 45. வேட்பு மனு தாக்கல் செய்ய இங்கு ஏராளமானோர் உள்ளனர். ஜனநாயகத்தில் பலர் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். 

ஆனால்  ஆம் ஆத்மி எம் எல் ஏ  சவுரப் பரத்வாஜ் வெளியிட்டு உள்ள ட்விட்டில் சுமார் 35 வேட்பாளர்கள் ஆர்ஓ அலுவலகத்தில் முதல்வருடன் அமர்ந்து உள்ளனர்.  அவர்கள் முறையான ஆவணங்கள்  இல்லாமல், முன்மொழிவாளர்கள் கூட இல்லாமல். இருக்கின்றனர். அவர்கள் முன்மொழிவாளர்களை வருமாறு தொலைபேசியில்  அழைக்கிறார்கள்.

தங்கள் ஆவணங்கள் முழுமையடைந்து அவர்கள் நியமனத்தை தாக்கல் செய்த பிறகே அவர்கள் முதல்வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிப்பார்கள் என கூறி உள்ளார்.


Next Story