தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து


தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து
x
தினத்தந்தி 21 Jan 2020 10:45 PM GMT (Updated: 21 Jan 2020 9:35 PM GMT)

தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீலுமான கபில் சிபல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து ஆளும் கட்சியில் இணைந்து மந்திரி பதவி பெற்ற எம்.எல்.ஏ. ஒருவரின் தகுதிநீக்கம் குறித்து சபாநாயகர் 4 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் குறித்து ஏற்கனவே நிலுவையில் இருக்கும் விவகாரங்கள் குறித்து சபாநாயகர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது.

இந்த தீர்ப்பு சரியானது. இது நாட்டில் அரசியல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கட்சி தாவல் மீதான தடையை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் 10-வது அட்டவணையில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு இதுபோன்ற கட்சி தாவல் விவகாரங்களை விசாரிக்கும் வகையில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என்று அவர் கூறினார்.

தமிழக சட்டசபையில் கடந்த 2017-ல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தரப்பிலும் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் தரப்பிலும் தொடர்ந்த வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story