மேற்கு வங்காளத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கிகளை கடத்திய சப்-இன்ஸ்பெக்டர் கைது


மேற்கு வங்காளத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கிகளை கடத்திய சப்-இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2020 9:57 PM GMT (Updated: 22 Jan 2020 9:57 PM GMT)

மேற்கு வங்காளத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கிகளை கடத்திய சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

கொல்கத்தா,

மம்தா பானர்ஜி ஆட்சி நடத்துகிற மேற்கு வங்காள மாநிலத்தில் லால்கார் போலீஸ் நிலையம் உள்ளது. இங்குள்ள பாதுகாப்பு அறையில் துப்பாக்கிகள் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தன.

இந்த அறையின் பொறுப்பு அதிகாரியாக சப்-இன்ஸ்பெக்டர் தாராபாடா டுது கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த 16-ந் தேதி வரை இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவர் மாற்றப்பட்டு, இந்த போலீஸ் நிலையத்தில் பிஸ்வாஜித் பாஞ்சா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக சமீபத்தில் பொறுப்பேற்றார்.

அவர் பதிவேடு வைத்து பாதுகாப்பு அறையை பரிசோதித்தபோது, வழக்குகளில் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக பதிவேட்டில் குறிப்பிட்டுள்ள 18 துப்பாக்கிகள் அங்கிருந்து கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இந்த துப்பாக்கிகளை அங்கு ஏற்கனவே சப்-இன்ஸ்பெக்டராக இருந்த தாராபாடா டுதுவும், மேலும் 3 பேரும் சேர்ந்து கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தாராபாடா டுது உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story