தேசிய செய்திகள்

கேரள சுற்றுலா பயணிகள் குறித்து உருக்கமான தகவல்கள்: உடல்கள் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகின்றன + "||" + Interesting Information About Kerala Tourists: Bodies are brought home today

கேரள சுற்றுலா பயணிகள் குறித்து உருக்கமான தகவல்கள்: உடல்கள் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகின்றன

கேரள சுற்றுலா பயணிகள் குறித்து உருக்கமான தகவல்கள்: உடல்கள் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகின்றன
நேபாளத்தில் பலியான கேரள சுற்றுலா பயணிகளின் உடல்கள் இன்று (வியாழக்கிழமை) சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகின்றன. பலியானவர்கள் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
காத்மாண்டு,

கேரளாவில் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த 4 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற மலைப்பிரதேச சுற்றுலா தலமான பொகாராவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கிருந்து திரும்பும் வழியில் மக்வான்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட டாமன் என்ற பகுதியில் கடந்த 20-ந் தேதி தங்கினர்.


தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 75 கி.மீ.க்கு அப்பால் அமைந்திருக்கும் இந்த பகுதியும் மலைக்குன்றுகள் நிறைந்த புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,500 மீட்டர் உயரம் கொண்ட இந்த பகுதியில் உள்ள எவரெஸ்ட் பனோரமா ரிசார்ட் என்ற உல்லாச விடுதியில் அவர்கள் அறை எடுத்திருந்தனர். 

இதில் ஒரு அறையில் பிரவீன் கிருஷ்ணன் நாயர் (வயது 39), அவரது மனைவி சரண்யா சசி (34), இவர்களின் மகள்கள் ஸ்ரீபத்ரா (9), ஆர்சா (7), மகன் அபினவ் (4) ஆகியோரும், ரஞ்சித் குமார் (39), அவரது மனைவி இந்து லட்சுமி (34), மகன் வைஷ்ணவ் ரஞ்சித் (2) ஆகியோருமாக 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் தங்கினர். மற்றொரு அறையில் மீதமுள்ளவர்கள் தங்கினர். அவர்களுடன் ரஞ்சித் குமார்-இந்து லட்சுமி தம்பதியின் மற்றொரு மகனான மாதவும் தூங்கினான்.

இவர்கள் தங்கியிருந்த பகுதி மலைப்பிரதேசம் என்பதால் அங்கு இரவில் கடுமையான குளிர் வாட்டியது. எனவே கதகதப்புக்காக பிரவீன் உள்ளிட்டோர் தங்கியிருந்த அறையில் கியாஸ் ஹீட்டரை இயக்கி வைத்துக்கொண்டு தூங்கியுள்ளனர். அறையின் ஜன்னல் கதவுகளும் உள்புறமாக பூட்டி வைக்கப்பட்டன.

நள்ளிரவில் இந்த ஹீட்டரில் இருந்து கியாஸ் கசிந்துள்ளது. இதனால் அறையில் படுத்திருந்த அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் தூக்கத்திலேயே மயங்கினர். நேற்று முன்தினம் காலையில் அவர்களின் அறைக்கு சென்ற விடுதி ஊழியர்கள், 8 பேரும் மயங்கி கிடப்பதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 


இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வந்து 8 பேரையும் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு அருகில் உள்ள ஹாம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 8 பேரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அறிந்த மற்ற பயணிகள் அலறித்துடித்தனர்.

இந்த துயர சம்பவம் குறித்து கேரளாவில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் அவர்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சுற்றுலா சென்ற இடத்தில் 2 குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்த சம்பவம் கேரளா முழுவதும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பலியானவர்களின் உடல்களை கேரளா கொண்டுவர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளதரன் நேற்று கூறினார்.

அதன்படி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு காத்மாண்டுவில் உள்ள மருத்துவனை ஒன்றில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலையில் அனைத்து உடல்களும் கேரளாவுக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதற்கிடையே இந்த சம்பவத்தில் பலியானவர்கள் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. சுற்றுலா சென்ற 4 குடும்பங்களின் தலைவர்களும் பாப்பனங்கோடு என்ஜினீயரிங் கல்லூரியில் 2004-ம் ஆண்டு பி.டெக். முடித்தவர்கள் ஆவர். நண்பர்களான அவர்கள் தங்கள் கல்லூரி தோழர்களுடனான சந்திப்பு ஒன்றை டெல்லியில் முடித்துவிட்டு, அங்கிருந்து நேபாளத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இதில் உயிரிழந்த பிரவீன்-சரண்யா தம்பதியின் பிள்ளைகளான ஸ்ரீபத்ரா, ஆர்சா, அபினவ் ஆகிய 3 பேரும் ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் ஆவர். எனவே அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காகவும் நேபாளத்தை அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

கொல்லம் அருகே உள்ள செம்பழந்தியை சேர்ந்த பிரவீன் துபாயில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி மற்றும் 3 பிள்ளைகளும் கொச்சியில் வசித்து வந்தனர். கொச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் சரண்யா எம்.பார்ம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். குழந்தைகள் 3 பேரும் உயிரிழந்த சம்பவம் அவர்கள் படித்து வந்த பள்ளியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோழிக்கோட்டை சேர்ந்த ரஞ்சித் குமார் திருவனந்தபுரம் தொழில்நுட்ப பூங்கா பணியை விட்டுவிட்டு சமீபத்தில்தான் சொந்த தொழில் தொடங்கி இருந்தார். இவரது மனைவி கோழிக்கோட்டில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வந்தார்.

உயிரிழந்த ரஞ்சித் குமார்-இந்து லட்சுமி தம்பதி கடந்த 16-ந் தேதிதான் தங்கள் திருமண நாளை கொண்டாடினர். அதைத் தொடர்ந்துதான் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றனர். நேபாளத்தில் நடந்த துயர சம்பவத்தின்போது, மற்றொரு அறையில் தூங்கியதால் உயிர் தப்பிய இவர்களது மூத்த மகன் மாதவ் தற்போது அனாதை ஆகியிருப்பது உறவினர்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 பேர் குழு ஒன்றை நேபாள சுற்றுலாத்துறை அமைத்து உள்ளது. சம்பவம் நடந்த விடுதி அரசு விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி உள்ளதா? என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த குழு விசாரிக்கும் என அரசு அறிவித்து உள்ளது.

கேரள சுற்றுலா பயணிகள் அனைவரும் திங்கட்கிழமை இரவு 10.30 மணிக்கு விடுதியில் உள்ள உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு தூங்க சென்றதாகவும், இதில் கியாஸ் கசிவு ஏற்பட்ட அறையில் தங்கியிருந்தவர்கள், நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் ஊழியர்களின் அதிருப்தியையும் பொருட் படுத்தாமல் அந்த உணவகத்தில் இருந்து அந்த கியாஸ் ஹீட்டரை வாங்கி சென்றதாகவும் விடுதி மேலாளர் சிவா கூறியுள்ளார்.