தூக்கு தண்டனை நிறைவேற்றும் விவரம்; நிர்பயா குற்றவாளிகளின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைப்பு


தூக்கு தண்டனை நிறைவேற்றும் விவரம்; நிர்பயா குற்றவாளிகளின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 23 Jan 2020 7:27 AM GMT (Updated: 23 Jan 2020 7:27 AM GMT)

தூக்கு தண்டனை நிறைவேற்றுவது தொடர்புடைய தகவல்கள் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

புதுடெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட நிர்பயா வழக்கில் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை கோர்ட்டு விதித்த இந்த  தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.

குற்றவாளிகள் 4 பேரையும் 22ந்தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் தூக்கில் போட வேண்டும் என விசாரணை கோர்ட்டு கடந்த 7ந்தேதி மரண வாரண்டு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இதற்கிடையே தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் ஜனாதிபதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கருணை மனு அனுப்பினார். இதனால் தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்குமாறு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தண்டனை நிறைவேற்றத்துக்கான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் திகார் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்குமாறு டெல்லி அரசும், துணைநிலை கவர்னரும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தனர். இந்த கருணை மனுவை பரிசீலித்த உள்துறை அமைச்சகமும் இதை நிராகரிக்க வேண்டும் என பரிந்துரைத்து, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது.

கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததும், தண்டனையை பிப்ரவரி 1ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதற்கான புதிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தற்போது குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனால் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு பவன் குப்தாவுக்கு காலஅவகாசம் கிடைக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.  இதனை அடுத்து பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதில் சந்தேக சூழல் எழுந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சிறை விதிகளின்படி, குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு முன் அது குறித்த தகவலை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும்.  இதன்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்புடைய தகவல்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு திகார் சிறை நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story