தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கில் தூக்கு கயிற்றை எதிர்நோக்கி இருக்கும் கொலை குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன? பதிலுக்காக காத்திருக்கும் அதிகாரிகள் + "||" + Nirbhaya case What is the last wish of the guilty of murder Officers awaiting response

நிர்பயா வழக்கில் தூக்கு கயிற்றை எதிர்நோக்கி இருக்கும் கொலை குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன? பதிலுக்காக காத்திருக்கும் அதிகாரிகள்

நிர்பயா வழக்கில் தூக்கு கயிற்றை எதிர்நோக்கி இருக்கும் கொலை குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன? பதிலுக்காக காத்திருக்கும் அதிகாரிகள்
பிப்ரவரி 1-ந் தேதி தூக்கில் போடப்பட இருக்கும் நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேரிடமும், அவர்களுடைய கடைசி ஆசை என்ன? என்று திகார் சிறை அதிகாரிகள் கேட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி ஓடும் பஸ்சில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


இவர்களில் ராம்சிங் டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் சிறுவர் என்பதால், இளஞ்சிறார் சட்டத்தின் கீழ் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு கடந்த மாதம் 22-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்த நிலையில், தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்கும் கடைசி முயற்சியாக 4 பேரில் ஒருவரான முகேஷ் குமார் சிங் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். மற்ற 3 பேரும் கருணை மனு தாக்கல் செய்யவில்லை.

மேலும் குற்றவாளிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனால் தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.

முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை தொடர்ந்தும், சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்ததாலும் 4 பேருக்கும் சிறையில் வருகிற 1-ந் தேதி காலை 6 மணிக்கு மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் அரோரோ உத்தரவிட்டார்.

பொதுவாக தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் குற்றவாளிகளிடம், அவர்களுடைய கடைசி ஆசை என்ன? என்று கேட்கப்படுவது வழக்கம். அதன்படி முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேரிடமும், அவர்களுடைய கடைசி ஆசை என்ன? என்பதை தெரிவிக்குமாறு திகார் சிறை அதிகாரிகள் கேட்டு உள்ளனர்.

ஆனால் இதுவரை அந்த 4 பேரும் தங்கள் கடைசி ஆசை பற்றிய விவரங்களை தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அவர்களுடைய கடைசி ஆசை என்ன? என்பதை எழுத்துபூர்வமாக பட்டியலிடுமாறு கேட்டு இருக்கிறோம். மேலும் உறவினர்களில் யாரையாவது சந்திக்க விரும்புகிறீர்களா? உங்களது உடைமைகளை யாரிடம் ஒப்படைக்க விரும்புகிறீர்கள்? என்பது பற்றியும் கேட்டு இருக்கிறோம். ஆனால் அவர்களில் யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லை. அவர்களுடைய பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.

மேலும், “கடைசி ஆசை என்ன என்பதை அவர்கள் தெரிவிக்கும் பட்சத்தில், அதை நிறைவேற்ற முடிந்தால் அதுபற்றி சிறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்” என்றும் அவர் கூறினார்.

குற்றாவாளிகள் 4 பேரையும் திகார் 3-வது எண் சிறையில் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 4 பேரின் எடைக்கு தகுந்தவாறு மணல் மூட்டைகளை தூக்கில் தொங்கவிட்டு கடத்த வாரம் ஒத்திகை பார்க்கப்பட்டது.

4 பேரும் ஒரே நேரத்தில் தூக்கில் போடப்படுவார்கள் என்று தெரிகிறது. அவர்களை தூக்கில் போடுவதற்காக மீரட் சிறையில் இருந்து பவன் ஜல்லாத் என்ற ஊழியர் வர இருப்பதை உத்தரபிரதேச மாநில அதிகாரிகள் உறுதி செய்து உள்ளனர்.

இதற்கிடையே, 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்ட டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் அரோரோ சுப்ரீம் கோர்ட்டின் கூடுதல் பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.