‘நிர்பயா’ குற்றவாளிகள் டெல்லி கோர்ட்டில் புதிய மனு: தூக்கில் போடுவது தாமதமாகும்?


‘நிர்பயா’ குற்றவாளிகள் டெல்லி கோர்ட்டில் புதிய மனு: தூக்கில் போடுவது தாமதமாகும்?
x
தினத்தந்தி 24 Jan 2020 10:38 AM GMT (Updated: 24 Jan 2020 10:06 PM GMT)

டெல்லி திகார் சிறை அதிகாரிகளுக்கு எதிராக நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகள் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளனர். இதனால் அவர்களை தூக்கில் போடுவது தாமதமாகும்.

புதுடெல்லி,

‘நிர்பயா’ என்று அழைக்கப்படுகிற துணை மருத்துவ மாணவியை, டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்தது. இதில் படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ராம்சிங், திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு இளம் குற்றவாளி 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, தண்டனைக்காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்.

முகேஷ் குமார்சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு விசாரணை கோர்ட்டு 2013-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது. அதை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துவிட்டன.

முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்து விட்டார். வினய் குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோரின் கடைசி சட்ட போராட்டமான சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. எஞ்சிய அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகிய 2 பேரும் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில், 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான மரண வாரண்டை டெல்லி செசன்சு கோர்ட்டு கடந்த 7-ந்தேதி பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து அவர்களை கடந்த 22-ந்தேதி தூக்கில் போட நிச்சயிக்கப்பட்டு இருந்தது. எனினும் முகேஷ் சிங் தாக்கல் செய்திருந்த கருணை மனு மீது முடிவு எடுத்து அறிவிக்காமல் இருந்ததால், தூக்கில் போடுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. (தற்போது கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.)

சட்ட நடைமுறைகளின்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டால் குற்றவாளிக்கு தண்டணையில் இருந்து 14 நாட்கள் விலக்கு அளிக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து குற்றவாளிகளை வருகிற 1-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போடுமாறு டெல்லி செசன்சு கோர்ட்டு நீதிபதி சதீஷ் குமார் அரோரா, புதிய மரண வாரண்டை பிறப்பித்தார். அவர்களை தூக்கில் போட ஏற்பாடுகள் ஆனது.

இந்த நிலையில், அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகிய 2 பேரது தரப்பில், அவர்களது வக்கீல் ஏ.பி. சிங், டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் புதிய மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

குற்றவாளிகள் வழக்கமான கால இடைவெளியில் டெல்லி திகார் சிறை அதிகாரிகளிடம் தங்களது மருத்துவ ஆவணங்கள், சிறைவாசம் அனுபவித்தது தொடர்பான ஆவணங்கள், சிறையில் வேலைபார்த்து பெற்ற சம்பளம் குறித்த ஆவணங்கள், கல்வி மற்றும் சீர்திருத்த திட்டங்கள் குறித்த ஆவணங்களை கேட்டு உள்ளனர். சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு தேவையான இந்த ஆவணங்களை திகார் சிறை அதிகாரிகள் வழங்கவில்லை.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

இந்த மனு, மரண தண்டனையை நிறைவேற்றுவதை மேலும் தாமதப்படுத்தும் உத்தியாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மனு மீது கோர்ட்டு முடிவு எடுக்கிறவரையில் தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம்.


Next Story