நேபாளத்தில் இறந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 3 வயது சிறுவன் இறுதி சடங்கு: கேரளாவில் சோகம்


நேபாளத்தில் இறந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 3 வயது சிறுவன் இறுதி சடங்கு: கேரளாவில் சோகம்
x
தினத்தந்தி 24 Jan 2020 8:50 PM GMT (Updated: 24 Jan 2020 8:50 PM GMT)

நேபாளத்தில் இறந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு 3 வயது சிறுவன் இறுதி சடங்கு செய்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரம்,

கேரளாவை சேர்ந்த 15 பேர் நேபாள நாட்டுக்கு சுற்றுலா சென்றதில் ஒரு அறையில் தங்கியிருந்த 8 பேர் கியாஸ் கசிவால் இறந்தனர். அவர்களது உடல்கள் நேற்று கேரளா கொண்டுவரப்பட்டது. இதில் துபாயில் தகவல் தொழில்நுட்ப தொழிலில் ஈடுபட்டு இருந்த பிரவீண் நாயர் அவரது மனைவி சரண்யா, குழந்தைகள் ஸ்ரீபத்ரா, ஆர்ச்சா, அபினவ் ஆகிய 5 பேரின் உடல்கள் கொல்லம் மாவட்ட எல்லையில் உள்ள செங்கோட்டுகோணம் என்ற கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு சரண்யாவின் மருமகன் 3 வயதான ஆரவ் தனது குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் அந்த உடல்களுக்கு இறுதி சடங்குகள் செய்தான். 3 குழந்தைகளும் முதலில் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டன. பின்னர் பிரவீண், சரண்யா உடல்கள் தகனம் செய்யப்பட்டன. ஏராளமான உறவினர்களும், நண்பர்களும் கண்ணீருடன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மற்ற 3 பேரின் உடல்கள் குன்னமங்கலம் அருகே உள்ள மூக்காவூர் என்ற இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அவர்களது உடலுக்கும் 6 வயது சிறுவன் இறுதி சடங்குகள் செய்தான்.

Next Story