நிர்பயா வழக்கு குற்றவாளிக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டது; வழக்கறிஞர் பகீர் குற்றச்சாட்டு


நிர்பயா வழக்கு குற்றவாளிக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டது; வழக்கறிஞர் பகீர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Jan 2020 7:45 AM GMT (Updated: 25 Jan 2020 7:45 AM GMT)

நிர்பயா வழக்கு குற்றவாளி வினய்க்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டது என அவரது வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

‘நிர்பயா’ என்று அழைக்கப்படுகிற துணை மருத்துவ மாணவியை, டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்தது. இதில் படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ராம்சிங், திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு இளம் குற்றவாளி 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, தண்டனைக்காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்.

முகேஷ் குமார்சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு விசாரணை கோர்ட்டு 2013-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது. அதை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துவிட்டன.

முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்து விட்டார். வினய் குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோரின் கடைசி சட்ட போராட்டமான சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.  குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி காலை 6 மணியளவில் நீதிமன்ற உத்தரவின்படி, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி. சிங், திகார் சிறை அதிகாரிகள் குறிப்பிட்ட சில ஆவணங்களை ஒப்படைக்க காலதாமதம் செய்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

எங்களுக்கு ஆவணங்கள் தேவை.  அவை, சிறை எண் 2 மற்றும் 3ல் உள்ளன.  வினய் சர்மா சிறை எண் 4க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டு உள்ளது.  அவர் சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  பின்பு தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையிலும், பின்னர் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு உள்ளார்.

சிறையில் அளித்த சிகிச்சை பற்றிய சான்றுகளை காண்பிக்க நாங்கள் விரும்புகிறோம்.  அவரது கையில் முறிவு ஏற்பட்டு உள்ளது.  வினய்க்கு விஷம் கொடுக்கப்பட்டு உள்ளது.  இந்த ஆவணங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை என கூறினார்.

வினய் சரியான நிலையில் இல்லை.  அவர் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டார்.  அவரின் கருணை மனுவை பரிசீலனை செய்யும்பொழுது ஜனாதிபதி, இந்த அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறினார்.  எனினும், இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என வினயின் வழக்கறிஞர் சிங் கூறியுள்ளார்.

Next Story