தேசிய செய்திகள்

குடியரசு தினத்தையொட்டி அசாமில் 5 இடங்களில் குண்டு வெடிப்பு: காஷ்மீரில் செல்போன் சேவை துண்டிப்பு + "||" + 5 places bombing in Assam by Republic Day: Disconnection of cell phone service in Kashmir

குடியரசு தினத்தையொட்டி அசாமில் 5 இடங்களில் குண்டு வெடிப்பு: காஷ்மீரில் செல்போன் சேவை துண்டிப்பு

குடியரசு தினத்தையொட்டி அசாமில் 5 இடங்களில் குண்டு வெடிப்பு: காஷ்மீரில் செல்போன் சேவை துண்டிப்பு
குடியரசு தினத்தை சீர்குலைக்கும் வகையில், அசாமில் 5 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. காஷ்மீரில் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டது.
புதுடெல்லி,

குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெரும்பாலும் அமைதியாக நடந்தநிலையில், அசாம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபட்டனர்.

அங்கு உல்பா (ஐ) உள்பட தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள், குடியரசு தின விழாவை புறக்கணிக்குமாறு எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்த சூழ்நிலையில், நேற்று காலை, சாரைடியோ மாவட்டம் தியோக்காட் நகரில் ஒரு கடைக்கு வெளியே குண்டு வெடித்தது.


அடுத்த சில நிமிடங்களில், திப்ரூகர் மாவட்டத்தில் 3 இடங்களில் குண்டு வெடித்தது. இவற்றில் ஒரு இடம், குடியரசு தின விழாவுக்கு மந்திரிகள் கார்களில் கடக்க இருந்த இடம் ஆகும்.

மற்றொரு குண்டு வெடிப்பு, போலீஸ் நிலையத்துக்கு 100 மீட்டர் தொலைவில் நடந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், கையெறி குண்டை வீசிவிட்டு செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தின்சுகியா மாவட்டத்தில் ஓரிடத்தில் குண்டு வெடித்தது.

5 குண்டு வெடிப்புகளும், காலை 8.15 மணி முதல் 8.25 வரை 10 நிமிடத்துக்குள் நடந்து முடிந்தன. இவை அனைத்தும் குறைந்த சக்திகொண்ட குண்டு வெடிப்புகள் ஆகும். நல்லவேளையாக, யாரும் காயம் அடையவில்லை.

குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து சம்பவ இடங்களுக்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த குண்டு வெடிப்புகளுக்கு உல்பா (ஐ) இயக்கம் பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதை அந்த இயக்கத்தை சேர்ந்த ஜாய் அசோம் தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்புகளுக்கு அசாம் மாநில முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது கோழைத்தனமான தாக்குதல். மக்களால் நிராகரிக்கப்பட்ட விரக்தியில் பயங்கர வாதிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை நீதியின் முன்பு நிறுத்தி கடும் நடவடிக்கை எடுப்போம்“ என்று கூறியுள்ளார்.

யூனியன் பிரதேசம் ஆன பிறகு, முதல்முறையாக காஷ்மீரில் குடியரசு தின விழா நேற்று நடந்தது. ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் மைதானத்தில் கவர்னர் ஜி.சி.மர்மு தேசிய கொடி ஏற்றிவைத்து, அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது அவர் பேசுகையில், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு, வளர்ச்சியின் வாசலில் காஷ்மீர் இருப்பதாக கூறினார்.

காஷ்மீர் போலீசார் சாகசங்களை செய்து காண்பித்தனர். உயரமான கட்டிடங்களில், குறிபார்த்து துப்பாக்கி சுடுவதில் நிபுணர்களான போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். ஆளில்லா குட்டி விமானங்கள் மூலமும் கண்காணிப்பு பணி நடந்தது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர்கள் கொடி ஏற்றினர். குடியரசு தின விழா நடக்கும் இடத்துக்கு செல்லும் சாலைகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இருப்பினும், மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மொபைல் போன் சேவை நேற்று அதிகாலையில் துண்டிக்கப்பட்டது.

விழாவை சீர்குலைக்க ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 3 பேர் போட்ட தாக்குதல் திட்டத்தை முறியடித்து விட்டதாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, குடியரசு தினத்தையொட்டி, மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜக்தீப் தாங்கரும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் டுவிட்டரில் மோதிக் கொண்டனர்.

கவர்னர் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில், “அனைத்து பிரச்சினைகளுக்கும், அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும். ஒருங்கிணைப்புதான் தீர்வுக்கான வழிமுறையே தவிர, மோதல் போக்கு அல்ல“ என்று கூறியுள்ளார்.

முதல்-மந்திரி மம்தா பானர்ஜியோ, “அரசியல் சட்டத்தை பாதுகாக்க இந்த நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம். அதில் கூறியுள்ள சமத்துவம், மதச்சார்பின்மை கொள்கைகளை கட்டிக்காப்போம்“ என்று கூறியுள்ளார்.

பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தொலைபேசி சேவைகள் மற்றும் 2ஜி இணைய சேவைகள் நேற்றிரவு மீண்டும் செயல்பட தொடங்கியது.


தொடர்புடைய செய்திகள்

1. குடியரசு தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
திருவள்ளூரில் குடியரசு தினத்தையொட்டி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், 113 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
2. குடியரசு தினம் கொண்டாட எதிர்ப்பு: மாவோயிஸ்டு கல்லால் அடித்துக்கொலை; ஒடிசாவில் பரபரப்பு
குடியரசு தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்த மாவோயிஸ்டு கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3. தேசிய கொடி ஏந்தி மைனஸ் 20 டிகிரி குளிரில் குடியரசு தினம் கொண்டாட்டம்
காஷ்மீரின் லடாக்கில் 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசிய கொடியுடன் இந்தோ-திபெத் எல்லை போலீசார் குடியரசு தினத்தினை கொண்டாடினர்.
4. 71வது குடியரசு தினம்; தேசிய கொடி ஏற்றி ராணுவ அணிவகுப்பினை ஏற்றார் தமிழக ஆளுநர்
நாட்டின் 71வது குடியரசு தினத்தினை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை மெரினாவில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி ராணுவ அணிவகுப்பினை ஏற்றார்.
5. குடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் நியமனம்
குமரி மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.