எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: வானொலி உரையில் பிரதமர் மோடி கருத்து


எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: வானொலி உரையில் பிரதமர் மோடி கருத்து
x
தினத்தந்தி 26 Jan 2020 11:30 PM GMT (Updated: 26 Jan 2020 9:19 PM GMT)

எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது. ஆயுதங்களை தூக்கியவர்கள், தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்று வானொலி உரையில் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பேசி வருகிறார்.

அதுபோல், நேற்று அவர் அந்த நிகழ்ச்சியில் பேசினார். இது, இந்த ஆண்டின் முதலாவது நிகழ்ச்சி ஆகும். பிரதமர் மோடி பேசியதாவது:-

குடியரசு தினத்தையொட்டி, அனைத்து குடிமக்களுக்கும் வாழ்த்துகள். குடியரசு தின கொண்டாட்டத்தால், இந்த நிகழ்ச்சியின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.

‘மன் கி பாத்’ நிகழ்ச்சி, மக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்துகொள்வதற்கு சரியான தளமாக உருவெடுத்துள்ளது.

2 வாரங்களுக்கு முன்பு, நாடு முழுவதும் பொங்கல், லோஹ்ரி, பிஹு போன்ற பண்டிகைகளை கொண்டாடிக்கொண்டிருந்தபோது, 25 ஆண்டு கால புரு ரியாங் அகதிகள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

புரு ரியாங் அகதிகள், தங்கள் பாதி வாழ்நாளை அகதிகள் முகாம்களில் கழித்த சூழ்நிலை, மிகவும் கவலைக்குரியது. அதையும் மீறி அவர்கள் இந்திய அரசியல் சட்டம் மீது நம்பிக்கை வைத்தனர். அவர்களின் துயர அத்தியாயம் இறுதியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அவர்களது மறு குடியமர்வுக்கு மத்திய அரசு ரூ.600 கோடி செலவளிக்கும்.

வன்முறை பாதையை நோக்கி திசைதிரும்பியவர்கள், அமைதி மீது நம்பிக்கை தெரிவித்து, நாட்டின் முன்னேற்றத்தில் தங்களையும் பங்குதாரராக இணைத்துக்கொண்டுள்ளனர். அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதால், வடகிழக்கு பகுதியில் கிளர்ச்சி குறைந்துள்ளது.

ஆகவே, எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது. வன்முறையையும், ஆயுதங்களையும் கையில் எடுத்தவர்கள், தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.

ஒவ்வொரு இந்தியனும் ஒரு அடி எடுத்து வைக்கும்போது, அதன் விளைவாக இந்தியா 130 அடி முன்னால் செல்கிறது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி பேசினார்.


Next Story