காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்த சட்டம்:ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு


காஷ்மீர்  விவகாரம், குடியுரிமை திருத்த சட்டம்:ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு
x
தினத்தந்தி 27 Jan 2020 5:27 AM GMT (Updated: 27 Jan 2020 6:32 AM GMT)

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தீர்மானம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

புதுடெல்லி

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து  செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

இதுபோல் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் குடியுரிமை (திருத்த) சட்டம்  2019 ஆகியவற்றில்  கடுமையான 6  தீர்மானங்களை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் கொண்டு வருகிறார்கள். இவை இந்த வாரம் விவாதத்திற்கும்  வாக்கெடுப்பிற்கும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

வரைவு தீர்மானங்கள் ஜனவரி 29 அன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின்  கூட்டத்தின்போது  விவாதத்திற்கு வருகிறது.  (உள்ளூர் நேரம் மாலை 6 மணியளவில்) மற்றும் ஜனவரி 30 ஆம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது.

இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்மானங்கள் குறித்த அதிகாரப்பூர்வ கருத்து தெரிவிக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் (எம்.இ.ஏ) மறுத்துவிட்டது.

இது குறித்து வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது;-

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் சில உறுப்பினர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தின்  மீது வரைவுத் தீர்மானத்தை கொண்டுவர விரும்புவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்து. குடியுரிமை திருத்த சட்டம் என்பது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்த சட்டம் பாராளுமன்றத்தின் இரு  அவைகளிலும் ஒரு பொது விவாதத்திற்குப் பிறகு உரிய செயல்முறை மற்றும் ஜனநாயக வழிமுறைகள் மூலம் நிறைவேற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வரைவு தீர்மானத்தை கொண்டு வருபவர்கள்  அதற்கு முன் உண்மைகளை துல்லியமாக மதிப்பீடு செய்ய ஈடுபடுவார்கள் என்று  அரசாங்கம் நம்புகிறது என்று கூறப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் 2019 செப்டம்பரில் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட மாற்றங்கள்  குறித்து விவாதித்திருந்தாலும் வாக்கெடுப்பு நடக்கவில்லை.

Next Story