‘போடோ’ பயங்கரவாத குழுக்களுடன் மத்திய அரசு முத்தரப்பு ஒப்பந்தம்: உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் கையெழுத்து


‘போடோ’ பயங்கரவாத குழுக்களுடன் மத்திய அரசு முத்தரப்பு ஒப்பந்தம்: உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் கையெழுத்து
x
தினத்தந்தி 27 Jan 2020 11:45 PM GMT (Updated: 27 Jan 2020 10:18 PM GMT)

அசாமில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ‘போடோ’ பயங்கரவாத குழுக்களுடன் மத்திய அரசு நேற்று முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டது.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் போடோ இன மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். இந்த மக்கள் அதிகம் வாழும் பகுதியை தனியாக பிரித்து போடோலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என ‘அனைத்து போடோ மாணவர் யூனியன்’ (ஏ.பி.எஸ்.யு.) என்ற அமைப்பு கடந்த 1972-ம் ஆண்டு முதல் போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதைப்போல ‘போடோ’ தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி.), ஐக்கிய போடோ மக்களின் அமைப்பு என பல குழுக்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆயுதப்போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதுடன், ஏராளமான அரசு, பொது சொத்துகளும் சேதமடைந்து உள்ளன.

இந்த போராட்டம் மற்றும் தாக்குதல்களை தடுத்து அசாமில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்த கிளர்ச்சி குழுக்களுடன் மத்திய-மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தின. இதன் பலனாக மத்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் ‘போடோ’ குழுக்கள் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் சத்யேந்தர் கார்க், அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால், தலைமை செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணா மற்றும் என்.டி.எப்.பி., ஏ.பி.எஸ்.யு. உள்ளிட்ட ‘போடோ’ குழுக்களின் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர்.

இந்த ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என அமித்ஷா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘போடோ பகுதிகளின் முன்னேற்றத்துக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். அசாம் பிராந்தியத்தின் இறையாண்மையை சமசரத்துக்கு உள்ளாக்காமல் ‘போடோ’ மக்களின் மொழி, கலாசாரம் போன்றவை பாதுகாக்கப்படும். அசாம் மற்றும் ‘போடோ’ மக்களின் பொன்னான எதிர்காலத்தை இது உறுதி செய்யும்’ என்று கூறினார்.

இந்த கிளர்ச்சி குழுக்களை சேர்ந்த சுமார் 1,550 பேர், 130 ஆயுதங்களுடன் வருகிற 30-ந்தேதி சரணடைய உள்ளதாக தெரிவித்த அமித்ஷா, இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள வாக்குறுதிகள் அனைத்தும் கால வரையறைக்கு உட்பட்டு நிறைவேற்றப்படும் என உள்துறை மந்திரியாக உறுதியளிக்கிறேன் என்றும் தெரிவித்தார். அசாமில் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் மகிழ்ச்சி வெளியிட்டார்.

‘போடே’ா குழுக்களுடன் செய்து கொள்ளப்பட்ட 3-வது ஒப்பந்தம் இதுவாகும். முன்னதாக ஏ.பி.எஸ்.யு.வுடன் கடந்த 1993-ம் ஆண்டு முதன் முதலில் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்மூலம் வரையறுக்கப்பட்ட அரசியல் அதிகாரத்துடன் கூடிய போடோலாந்து தன்னாட்சி கவுன்சில் உருவாக்கப்பட்டது.

பின்னர் ‘போடோ’ விடுதலைப்புலிகள் அமைப்புடன் 2003-ம் ஆண்டு அடுத்த ஒப்பந்தம் கையெழுத்து போடப்பட்டது. இதன் பலனாக அசாமின் கோக்ரஜார், சிராங், பாஸ்கா, உடல்குரி ஆகிய 4 மாவட்டங்களை இணைத்து போடோலாந்து பிராந்திய கவுன்சில் உருவானது. கல்வி, காடுகள், தோட்டக்கலை உள்ளிட்ட துறைகளை இந்த கவுன்சில் நிர்வகிக்கிறது.

இதன் தொடர்ச்சியாக 3-வது முறையாக தற்போது முத்தரப்பு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அமைதி திரும்பும் என மத்திய-மாநில அரசுகள் நம்பிக்கை வெளியிட்டு உள்ளன.


Next Story