நிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து, முகேஷ் தாக்கல் செய்த மனு மீது நாளை தீர்ப்பு


நிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து, முகேஷ் தாக்கல் செய்த மனு மீது நாளை தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Jan 2020 10:34 AM GMT (Updated: 28 Jan 2020 10:34 AM GMT)

கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

புதுடெல்லி,

‘நிர்பயா’ என்று அழைக்கப்படுகிற துணை மருத்துவ மாணவியை, டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்தது. இதில் படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ராம்சிங், திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓர் இளம் குற்றவாளி 3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று , தண்டனைக்காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்.

முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு விசாரணை கோர்ட்டு 2013-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது. அதை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துவிட்டன.

முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனவரி 17 ந்தேதி  ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்தது குறித்து நீதித்துறை மறு ஆய்வு கோரி முகேஷ் குமார் சிங் சுப்ரீம் கோர்ட்டை நாடினார்.

சத்ருகன் சவுகான் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின்  தீர்ப்பின் அடிப்படையில் கருணை மனுவை நிராகரித்த விதம் குறித்து நீதித்துறை மறுஆய்வு செய்ய 32-வது பிரிவின் கீழ் முகேஷ் குமார் சிங்  தரப்பில் ஒரு மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது விசாரணையின் போது அவர் (குற்றவாளி முகேஷ்) திகார் சிறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் என முகேஷின் வழக்கறிஞர் அஞ்சனா பிரகாஷ் சுப்ரீம் கோர்ட்டில் கூறினார்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா வாதிடும்போது, சில சமயங்களில் மரண தண்டனை விதிக்கப்படாதவர்களின் மருத்துவ ஆரோக்கியம் மற்றும்  மரணதண்டனை குற்றவாளிகளின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது, அதனால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க முடியாது, ஆனால் இந்த வழக்கில், (முகேஷ்) குற்றவாளியின் மருத்துவ நிலை நன்றாக உள்ளது என கூறினார்.

குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு  நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story