சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 28 Jan 2020 10:15 PM GMT (Updated: 28 Jan 2020 9:02 PM GMT)

சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

புதுடெல்லி,

சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தால், அதை 8 வாரங்களுக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை கிண்டியில் இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என பட்டியல் இடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால் பணிகள் முடங்கி இருக்கிறது. எனவே இதனை அவசர வழக்காக கருதி நாளையே (அதாவது இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிடப்பட்டது.

ஆனால் இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க இயலாது என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.


Next Story