தேசிய செய்திகள்

கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததற்கு எதிர்ப்பு: ‘நிர்பயா’ குற்றவாளி வழக்கில் இன்று தீர்ப்பு; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு + "||" + Opposition to President's rejection of mercy petition: Nirbhaya guilty verdict today - Supreme Court Notice

கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததற்கு எதிர்ப்பு: ‘நிர்பயா’ குற்றவாளி வழக்கில் இன்று தீர்ப்பு; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததற்கு எதிர்ப்பு: ‘நிர்பயா’ குற்றவாளி வழக்கில் இன்று தீர்ப்பு; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
‘நிர்பயா’ வழக்கில் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளி முகேஷ் குமார் சிங் தொடுத்த வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வழக்கு, ‘நிர்பயா’ என அழைக்கப்படுகிற துணை மருத்துவ மாணவி, டெல்லியில் ஒரு கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு ஆகும்.

இந்த வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டினால் உறுதி செய்யப்பட்டு விட்டது. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் கடைசி சட்ட ஆயுதமாக கருதப்படுகிற சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை கடந்த 17-ந்தேதி ஜனாதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இதையடுத்து 4 பேரையும் தூக்கில் போட டெல்லி செசன்ஸ் நீதிபதி சதீஷ்குமார் மரண வாரண்டு பிறப்பித்தார். 4 பேரையும் 1-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முகேஷ் குமார் சிங் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது.

அப்போது முகேஷ் குமார் சிங் தரப்பில் மூத்த வக்கீல் அஞ்சனா பிரகாஷ் ஆஜரானார். சுப்ரீம் கோர்ட்டின் இரு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அவற்றின் அடிப்படையில் வாதாடினார்.

அவர், “ஜனாதிபதியின் அதிகாரம் மனிதாபிமானத்தின் அடிப்படையில் மறுபரிசீலனைக்கு உரியது; இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை தனிமை சிறையில் அடைப்பது குறித்த விதிமுறைகளை சிறை துறை மீறி உள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகே குற்றவாளியை தனிமை சிறையில் அடைக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் குற்றவாளிகள் கருணை மனுவின் மீது ஜனாதிபதி முடிவு எடுப்பதற்கு முன்பே தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் கருணை மனுவின் மீது ஜனாதிபதி முடிவு எடுப்பதற்கு முன்பு உரிய ஆவணங்கள் அவருக்கு அளிக்கப்படவில்லை. விசாரணை கோர்ட்டு தீர்ப்பின் நகல் ஜனாதிபதி முன் வைக்கப்படவில்லை” என கூறினார்.

இதை டெல்லி அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மறுத்தார். அவர், “அந்த தீர்ப்பு, ஜனாதிபதிக்கு தாக்கல் செய்யப்பட்டது” என்று கூறினார்.

இதற்கு முகேஷ் குமார் சிங் தரப்பு வக்கீல், “தகவல் அறியும் சட்டத்தின்கீழ் பெற்ற தகவலில் அப்படி கூறப்பட்டுள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் வாதாடும்போது, “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒன்றில், சிறை அதிகாரியின் அறிக்கை ஜனாதிபதி முன்பு கருணை மனுவை பரிசீலிப்பதற்காக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால் இந்த வழக்கில் அப்படி செய்யவில்லை. மேலும் குற்றவாளி முகேஷ் குமார் சிங் சிறையில் கடுமையான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். குற்றவாளி கடந்த 5 வருடங்களாக தூங்கவில்லை. தூங்க முயற்சித்தால் கனவில் மரணமும் தன்மீதான பாலியல் வன்முறையும்தான் அவரது நினைவுக்கு வருகிறது என்று கூறுகிறார். மற்றொரு குற்றவாளியான ராம் சிங் சிறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் தற்கொலை என்று அந்த வழக்கு முடிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.

இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

“ஜனாதிபதி முன்பு சட்டப்படி அனைத்து ஆவணங்களும் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக பிரமாண பத்திரம் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி தன்மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டது என்பதும், சிறையில் தவறாக நடத்தப்பட்டார் என்பதும் தன்னை தனிமை சிறையில் அடைத்தது குறித்து புகார் செய்வதும் அவருக்கு கருணை காட்டுவதற்கான முகாந்திரமாக அமையாது. கருணை மனு மீது விரைவாக ஏன் முடிவு எடுக்கப்பட்டது என்றால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதியின் மனநிலையை கருத்தில் கொண்டுதான் அந்த முடிவு எடுக்கப்பட்டது. கருணை மனு மீது முடிவு எடுப்பது ஜனாதிபதியின் முழு அதிகாரத்துக்கு உட்பட்டது. ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி விரைவாக முடிவு எடுத்து, அதனை நிராகரித்ததை கேள்வி எழுப்ப முடியாது. சிறை அதிகாரியின் அறிக்கை ஜனாதிபதி முன்பு வைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. கருணை மனுவை ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்று ஆலோசனை வழங்க சிறை அதிகாரிக்கு அதிகாரம் கிடையாது. குற்றவாளியின் மருத்துவ அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்று அவர் தனது வாதத்தை முடித்தார்.

இறுதியாக முகேஷ் குமார் சிங் தரப்பில் சிறைத்துறை மற்றும் உள்துறை அமைச்சகம் தனித்தனியாக ஆவணங்களை ஜனாதிபதிக்கு அனுப்பினார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் எந்த ஆவணங்கள் அனுப்பப்பட்டன என்ற தகவல், குற்றவாளிக்கு அளிக்கப்படவில்லை. இது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று வாதிட்டார். அத்துடன் இரு தரப்பு வாதம் முடிந்தது.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள், முகேஷ் குமார் சிங் வழக்கு மீதான தீர்ப்பு 29-ந்தேதி (இன்று) வழங்கப்படும் என அறிவித்தனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...