ஆளுநரை திரும்ப பெறக்கோரி கேரள சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் அமளி


ஆளுநரை திரும்ப பெறக்கோரி கேரள சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் அமளி
x
தினத்தந்தி 29 Jan 2020 4:59 AM GMT (Updated: 29 Jan 2020 7:15 AM GMT)

ஆளுநரை திரும்ப பெறக்கோரி கேரள சட்டசபையில் ஐக்கிய ஜனநாயக முன்னனி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரம்,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரள சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. மேலும், இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கேரள அரசின் நிலைப்பாட்டிற்கு கேரள ஆளுநர் ஆரீஃப் முகமது கான் அதிருப்தி தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்தை எதிர்த்து மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது தவறு என்று கூறியிருந்தார். இதற்கு மாநில முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து கேரள சட்டசபையில் இன்று நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வந்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், தனது உரையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வாசகங்களை வாசிக்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். இதற்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். 

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கேரள ஆளுநரின் நிலைப்பாட்டிற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பியதால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சட்டமன்ற காவலர்கள் உதவியோடு கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநரை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

Next Story