குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம்


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 29 Jan 2020 6:13 AM GMT (Updated: 29 Jan 2020 6:13 AM GMT)

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

புதுடெல்லி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த இந்தியாவின் முடிவிற்கு  கண்டனம் தெரிவித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஐந்து குழுக்கள் நேற்று  ஒரு கூட்டு தீர்மானத்தை தாக்கல் செய்தன. இந்த தீர்மானம் விவாதிக்கப்பட்டு வாக்களிப்புக்கு விடப்படும்.

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மீதான போலீஸ்  நடவடிக்கையை குறிப்பாக பல்கலைக்கழக வளாகங்களில் ஒரு  "மிருகத்தனமான ஒடுக்குமுறை" என்று தீர்மானத்தில் கண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் தீர்மானத்தில் உத்தரபிரதேசம் உள்பட பிற மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட தடுப்புக்காவல்கள், சித்திரவதை மற்றும் இணைய முடக்கம் ஆகியவை கடுமையாக விமர்சிக்கப்பட்டு உள்ளது.

இந்த தீர்மானம் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) பற்றிய கவலைகளையும் வெளிப்படுத்தி உள்ளது. மேலும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நடைமுறைகளை பின்பற்றுமாறு இந்தியாவை கேட்டுக் கொண்டு உள்ளது.

இந்தியாவின் சர்வதேச கடமைகளை மீறும் பல்வேறு வகையான மக்களுடன் அமைதியான பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், பாரபட்சமான திருத்தங்களை ரத்து செய்யவும் இந்திய அரசாங்கத்தை  தீர்மானம் கேட்டு கொண்டுள்ளது. மத சகிப்பின்மை மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு ஆகியவற்றைத் தூண்டுவதில் அதிகரித்து வரும் தேசியவாதத்தை எச்சரிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திற்கு அதன் தீர்மானங்களைச்  செயல்படுத்த அதிகாரம் இல்லை என்றாலும், ஆவணத்தின் வலுவான சொற்கள் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையைத்  தடுக்கக்கூடும்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story