ஒடிஸா மாநிலத்தில் பேருந்து விபத்து : 8 பேர் பலி -35 பேர் காயம்


ஒடிஸா மாநிலத்தில் பேருந்து விபத்து : 8 பேர் பலி -35 பேர் காயம்
x
தினத்தந்தி 29 Jan 2020 9:36 AM GMT (Updated: 29 Jan 2020 9:36 AM GMT)

ஒடிஸா மாநிலத்தில் இன்று காலை பேருந்து ஒன்று 25 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர், 35 பேர் காயமடைந்தனர்.

புவனேஸ்வர்,

ஒடிஸா மாநிலம், கஞ்சம் மாவட்டம் காஷிப்பூரிலிருந்து பெர்ஹாம்பூருக்கு  சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று இன்று அதிகாலை தப்தபாணி காட்  என்ற பாலம் அருகே 25 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் இருந்த 8 பேர் உயிரிழந்தனர், 35 பேர் படுகாயமடைந்தனர். 

காயமடைந்த பயணிகள் திகபஹந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் 12 பேர் உடல்நிலை மோசமடைந்ததால் உயர்சிகிச்சைக்காக பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு நடவடிக்கைகள் குறித்து மாநில தலைமை தீயணைப்பு அதிகாரி சுகந்தா சேத்தி கூறியபோது, “விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மோகனா, சனகேமுண்டி, திகபஹந்தி மற்றும் பெர்ஹாம்பூரைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 40  பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

இன்று நிலவி வந்த அடர்த்தியான மூடுபனியால் ஓட்டுநருக்கு ஏற்பட்ட பார்வை திறன் குறைவால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்மநாப பெஹெரா தெரிவித்துள்ளார்.

Next Story