சர்ச்சை பேச்சு விவகாரம் ; பா.ஜ.க. எம்.பி.க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


சர்ச்சை பேச்சு விவகாரம் ; பா.ஜ.க. எம்.பி.க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 29 Jan 2020 9:55 AM GMT (Updated: 29 Jan 2020 9:55 AM GMT)

டெல்லி தேர்தல் பேரணியில் பேசிய சர்ச்சை பேச்சு விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 8ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  தேர்தல் முடிவுகள் வரும் பிப்ரவரி 11ந்தேதி வெளியிடப்படும்.

தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வின் நட்சத்திர பேச்சாளரான மத்திய இணை மந்திரி அனுராக் தாகூர் டெல்லியில் ரித்தாலா தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் மணீஷ் சவுத்ரிக்கு ஆதரவாக பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசும்பொழுது, துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

தேர்தல் நேரத்தில் இதுபோன்று மக்களை தூண்ட கூடிய வகையில் அனுராக் பேசியது பற்றி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் அஜய் மக்கான் மற்றும் சுபாஷ் சோப்ரா ஆகியோர் புகார் அளித்தனர். டெல்லி நகரின் அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை சீர்குலைக்கும் தெளிவான நோக்குடன் வெறுப்புக்குரிய வகையில் டெல்லியின் பல்வேறு இடங்களில் பேசி வருகின்றார் என அதில் தெரிவித்து இருந்தனர்.  அனுராக் மற்றும் பிரவேஷ் வர்மா ஆகிய இருவர் மீதும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து அனுராக் பேசிய முழு விவரங்களை வீடியோக்களுடன் அளிக்கும்படி டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகத்திடம் இந்திய தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டது. தொடர்ந்து இந்த விவகாரத்தில் அனுராக் பதிலளிக்கும்படி அவருக்கு நோட்டீசும் அனுப்பியது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், பா.ஜ.க.வின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து அனுராக் தாகூர் மற்றும் பிரவேஷ் வர்மா ஆகியோரை அடுத்த உத்தரவு வரும் வரை உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் சிங் வர்மாவுக்கு, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இவ்விவகாரத்தில் நாளை மதியம் 12 மணிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என காலஅவகாசம் கொடுத்துள்ளது. இதனை செய்ய தவறினால் இந்திய தேர்தல் ஆணையம் தக்க முடிவெடுக்கும்.

Next Story