கவர்னரை உரையாற்ற எதிர்க்கட்சிகள் அனுமதிக்காததால் பெரும் பரபரப்பு: வரலாறு காணாத அமளி


கவர்னரை உரையாற்ற எதிர்க்கட்சிகள் அனுமதிக்காததால் பெரும் பரபரப்பு: வரலாறு காணாத அமளி
x
தினத்தந்தி 29 Jan 2020 10:18 PM GMT (Updated: 29 Jan 2020 10:18 PM GMT)

கேரள சட்டசபையில் உரையாற்ற கவர்னரை அனுமதிக்காமல் எதிர்க் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாட்டிலேயே முதல் மாநிலமாக கேரள அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு எதிர்க் கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆதரவு தெரிவித்து இருந்தது. இதைப்போல இந்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டிலும் கேரள அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.

மாநில அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் எதிர்ப்பு தெரிவித்தார். தன்னிடம் அனுமதி பெறாமல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது சட்ட விதிகளுக்கு முரணானது எனக்கூறிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்தநிலையில் கேரள சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் உரையாற்றுவதற்காக கவர்னர் ஆரிப் முகமது கான் சட்டசபைக்கு வந்தார். அவர் உரையாற்றுவதற்காக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், முதல்- மந்திரி பினராயி விஜயன், சட்ட மந்திரி பாலன் மற்றும் தலைமை செயலாளர் இணைந்து சபாநாயகர் இருக்கைக்கு அவரை அழைத்து வந்தனர்.

அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அறையின் மையப்பகுதியில் அமர்ந்து கவர்னரை முன்னேற விடாமல் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ‘கவர்னரே திரும்பி செல்லுங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்த அவர்கள், ‘கோ பேக் கவர்னர்’ என கோஷமிட்டனர். இதனால் கவர்னரால் சபாநாயகரின் இருக்கைக்கு செல்ல முடியவில்லை.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விமர்சித்த கவர்னரை திரும்ப அழைக்க ஜனாதிபதியை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சியினரின் இந்த கடுமையான அமளி சுமார் 10 நிமிடம் தொடர்ந்தது.

இதனால் சட்டசபையில் வரலாறு காணாத கூச்சலும், குழப்பமும் நீடித்தது. எதிர்க்கட்சியினரை அமைதிப்படுத்தி, அவர்களது இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகரும், கவர்னரும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனவே அமளியில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சியினரை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே காவலர்கள் வந்து எதிர்க்கட்சியினரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் கவர்னர் தனது உரையை வாசிக்க தொடங்கினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து உடனே வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் உரையாற்ற கவர்னரை அனுமதித்ததற்காக முதல்-மந்திரி மீது எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா பின்னர் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே சட்டசபையில் தனது உரையை வாசித்த கவர்னர் ஆரிப் முகமது கான், அதில் இடம் பெற்றிருந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பகுதியை (18-வது பத்தி) வாசிக்கும்போது தனது அதிருப்தியை வெளியிட்டார். அவர் கூறுகையில், ‘இந்த 18-வது பத்தி அரசின் கொள்கை அல்லது திட்டத்தின் கீழ் வரவில்லை என்றாலும், முதல்-மந்திரியின் வேண்டுகோளுக்கு இணங்கி வாசிக்கிறேன். இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவருக்கு மதிப்பளித்து வாசிக்கிறேன். இது அரசின் கருத்து என முதல்-மந்திரி தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்’ என்று தெரிவித்தார்.

கவர்னர் உரையின் அந்த பகுதியில், ‘நமது குடியுரிமை ஒருபோதும் மதத்தின் அடிப்படையில் இருக்க முடியாது. ஏனெனில் இது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப் பான மதசார்பற்ற தன்மைக்கு எதிரானது ஆகும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.


Next Story